பேட்டரி காரில் கோட்டையை சுற்றி பார்த்த முதல்-அமைச்சர் விஜய்…

சென்னை,கடந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வுக்கு 108 இடங்கள் கிடைத்தது. இருந்தபோதும் பெரும்பான்மை இல்லாததால், அந்த கட்சியால் உடனடியாக ஆட்சி அமைக்க இயலவில்லை.

எனவே தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி. இந்திய யூனியன் முஸ் லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு அளித்தன. அதைத்தொடர்ந்து கடந்த 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றார்.

தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அரசு நிர்வாகத்தில் அதிரடியான பல மாற்றங்களைச் செய்து வருகிறார். குறிப்பாக, தலைமைச் செயலகத்தில் அவர் பின்பற்றி வரும் நடைமுறைகள் கோட்டை வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

முதல்-அமைச்சராக பதவியேற்ற நாள் முதல், துல்லியமான நேர தவறாமையை விஜய் கையாண்டு வருகிறார். தினமும் காலையில் சரியாக 9 மணிக்குத் தலைமைச் செயலகத்திற்கு வந்துவிடும் அவர், மாலை 5 மணி வரை தனது அலுவலகத்திலேயே இருந்து மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் துறை ரீதியான கோப்புகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்.

அதேபோல் அரசியல் தலைவர்கள் பலரும் மதிய உணவிற்காக தங்களது வீட்டிற்கு செல்வது அல்லது வெளி இடங்களுக்குச் செல்வது வழக்கமாக உள்ள நிலையில், முதல்வர் விஜய் முற்றிலும் மாறுபட்ட பாணியைக் கடைப்பிடிக்கிறார். தினமும் தனது இல்லத்தில் இருந்து எடுத்து வரப்படும் மதிய உணவை, கோட்டையில் உள்ள தனது அலுவலக அறையிலேயே அமர்ந்து சாப்பிடுகிறார்.

மதிய உணவு இடைவேளை முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் தனது அரசுப் பணிகளைத் தொடங்கி விடுகிறார். முதலமைச்சரே இவ்வளவு துல்லியமாக நேரத்தைக் கடைப்பிடிப்பதால், தலைமைச் செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் தங்களது வேலை நேரத்தை முறையாகப் பின்பற்றி வருகின்றனர்.

இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தை பேட்டரி வாகனத்தில் சென்று முதல்-அமைச்சர் விஜய் பார்வையிட்டார். சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள பழமையான செயின்ட் மேரிஸ் தேவாலாயத்தையும் பார்வையிட்டார். பல்வேறு துறை அலுவலகங்களை பார்வையிட்ட முதல்-அமைச்சர் விஜயை காண ஏராளமான ஊழியர்கள் குவிந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here