டிஜிட்டல் தளங்கள் வழியாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டவிரோத வட்டித்தொழில் ‘ஆலோங்’ (Ah Long)குகளின் அச்சுறுத்தல்களை ஒடுக்க, அரசாங்கம் மிகவும் கடுமையான, நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிலாங்கூர் ஷஸ்தா உதவி அமைப்பு வலியுறுத்தியுள்ளது என்று இச்சங்கத்தின் தலைவர் ராம் ஜி கூறினார்.
உரிமம் பெறாதக் கடன்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 2019ஆம் ஆண்டு தொடங்கி இன்று முதல் இச்சங்கம் செயல்பட்டு வந்தாலும், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தச் சிக்கல் இன்னும் தீவிரமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது ‘ஆலோங்’குகள் பழையப் பாணியில் வெறும் ரவுடிகளை மட்டும் நம்பியிருக்காமல், தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள், மொபைல் செயலிகளின் மூலமாகவும் பயன்படுத்திப் பொதுமக்களைப் பொறியில் வீழ்த்தும் நவீன குழு மூலமாக உருவெடுத்து வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தக் காலக்கட்டத்தில் ஆலோங்குகள் மக்கள் தங்களைத் தேடி வரும் வரை காத்திருப்பதில்லை. மாறாக, டிக்டாக் (TikTok), பேஸ்புக் (Facebook) நேரடியாக மக்களின் கைதொலைபேசி மூலமாக குறுஞ்செய்திகள் அனுப்பிக் கூட, பண நெருக்கடியில் தவிக்கும் மக்கள் இவர்களின் இலக்காக மாறக்கூடும் என்பதே தற்போதையபெரும் கவலையாகுகின்றன என்று பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அவர் சொன்னார்.அரசு ஊழியர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், இளம் பட்டதாரிகள், தனித்து வாழும் தாய்மார்கள், சிறு வணிகர்கள் என பலதரப்பட்ட மக்களிடமிருந்து புகார்கள் வருவதாகவும் இச்சங்கத்தின் தோற்றுநருமான அவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் 500 ரிங்கிட் முதல் அளவில் சிறுதொகையை கடனாகப் பெறும் பலர், மிகக் குறுகிய காலக்கட்டத்தில் வானளாவிய வட்டி விகிதம் காரணமாக ஆயிரக்கணக்கான ரிங்கிட்களைத் திருப்பிச்செலுத்த வேண்டியக் கட்டாயத்திற்குத் ஆளாகின்றன என ராம் ஜி தெரிவித்துள்ளார். பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறியப்போது, அவர்களின் குடும்பத்தினருக்கு மிரட்டல்கள், பணியிடங்களுக்குத் தொடர்புக் கொள்வது, புகைப்படங்களைப் பரப்புவது, குடும்பத்தினரின் எண்களை இணையத்தில் வெளியிடுவது போன்ற பல்வேறுச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அவமானம், சமூகத்தின் தவறான பார்வைக்கு பயந்தே பல பாதிக்கப்பட்டவர்கள் உதவி கோர முன்வருவதில்லை என்று ராம் குறிப்பிட்டார். ஆலோங்குகளிடம் கடன் வாங்குபவர்கள் சூதாட்டக்காரர்கள் அல்லது பொறுப்பற்றவர்கள் என்ற எண்ணம் மாற வேண்டும். இன்றைய பொருளாதாரச் சூழலில், அன்றாட வாழ்க்கைச் செலவினங்களை சமாளிக்க முடியாமல், வங்கிகளில் எளிதாகக் கடன்கள் கிடைக்காததாலும் தாம் பலர் இத்தகைய ‘உடனடி கடன்’ விளம்பரங்களை நம்பி ஏமாறுகின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு சிலாங்கூர் ஷஸ்தா உதவி அமைப்பு பரிந்துரைகள்:
• டிஜிட்டல் விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடு: சமூக ஊடகங்களில் வரும் சட்டவிரோத கடன் விளம்பரங்களை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், அத்தளங்கள் அத்தகைய உள்ளடக்கங்களை வடிகட்டுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
• கூட்டணி நடவடிக்கை: காவல்துறை, மலேசிய தொடர்புப் பல்லூடக ஆணையம் (MCMC), பேங்க் நெகாரா மலேசியா (BNM) சமூக ஊடக நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
• சிறப்பு உதவி மையம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி ஆலோசனைகள், பாதுகாப்பு, மனநல ஆதரவை வழங்க ஒரு சிறப்பு உதவி மையம் (Pusat Bantuan Khas) உருவாக்கப்பட வேண்டும்.
”இது வெறும் பணப் பிரச்சனை மட்டுமல்ல; குடும்பங்களைச் சீரழிக்கும் ஒரு சமூக, மனநலப் பிரச்சனையாகும் என்றும் ராம் ஜி எச்சரித்தார்.
சிலாங்கூர் ஷஸ்தா உதவி அமைப்பு இனிவரும் காலங்களில் இளைஞர்களிடையே டிஜிட்டல் நிதி மோசடிகள், சட்டவிரோதக் கடன்களின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிரமாகச் செயல்படும் என்றும் அவர் மேலும் கோடிக்காட்டினார்.
எஸ்.ஷாண்








