சிங்கப்பூரில் மோசடிக் கும்பல்களுக்கு அடியாட்களாகச் செயல்படும் மலேசியர்கள்: மார்ச் முதல் இதுவரை 26 பேர் அதிரடி கைது!

கோலாலம்பூர் :

சிங்கப்பூர் முழுவதும் பண மோசடிக் கும்பல்களிடம் ஏமாந்த பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைச் சேகரித்து, அக்கும்பல்களுக்கு உதவி புரிந்து வந்த குற்றத்திற்காகக் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 26 மலேசியர்கள் சிங்கப்பூரில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில், கடைசியாகக் கடந்த மே 19 அன்று, மோசடிக்கு உள்ளான ஒருவரிடமிருந்து ரொக்கப் பணம் மற்றும் தங்கத்தைப் பெற்றுக்கொண்டு சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்ற 34 வயதுடைய மலேசியப் பெண் ஒருவர் எல்லையில் வைத்துப் போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அண்மையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி எனப் பொய் அடையாளம் காட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் அடையாளம் பணமோசடி (Money Laundering) நடவடிக்கைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளார்.

மேலும், இந்த ரகசிய விசாரணை குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என எச்சரித்த அந்தப் போலி அதிகாரி, பெண் தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்க வேண்டும் என்றால், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து, தங்க நகைகளுடன் விசாரணை முகவரிடம் (Agent) ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய அந்தப் பெண், கோவான் (Kovan) பகுதியில் வைத்து 13,700 சிங்கப்பூர் டாலர் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை அந்த மலேசியப் பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் போலீசில் புகார் அளித்தார் என்று, சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் கிடைத்த சில மணி நேரங்களிலேயே களமிறங்கிய சிங்கப்பூர் ‘மோசடி எதிர்ப்புப் பிரிவு’ (Anti-Scam Command) அதிகாரிகள், தீவிரத் தேடுதலுக்குப் பின் அதே நாளில் தப்பியோட முயன்ற 34 வயது மலேசியப் பெண்ணைக் கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு தங்கக் கட்டிகள் (Gold Bars) மற்றும் நகைகள் பத்திரமாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

அனைத்துலக மோசடி வலைப்பின்னல் கும்பலின் கட்டளைக்கு இணங்கவே தான் இவ்வாறு செயல்பட்டதாக அந்தப் பெண் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது சிங்கப்பூரின் 1992 ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இதர கடுமையான குற்றங்கள் சட்டத்தின்கீழ் இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 500,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பண மோசடி மூலம் கிடைக்கும் சட்டவிரோதப் பணத்தைக் கையாளுவதற்கும், அதனைச் சேகரிப்பதற்கும் மலேசியாவிலிருந்து அடியாட்களாக (Mules) பலர் சிங்கப்பூருக்குள் ஊடுருவி வரும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருவதாகச் சிங்கப்பூர் போலீசார் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த ஆண்டு டிசம்பர் 30 முதல் தனது தண்டனைச் சட்டங்களைக் கடுமையாக்கியுள்ளது:

மோசடிக் கும்பலின் உறுப்பினர்கள் மற்றும் ஆட்களைச் சேர்ப்பவர்களுக்கு (Recruiters) நீதிமன்றம் கட்டாயமாக 6 முதல் 24 பிரம்படிகள் (Caning) வரை வழங்கச் சட்டம் வழிவகை செய்கிறது. மேலும் பணத்தைக் கடத்தும் ‘ஏஜென்ட்’களாகச் செயல்படும் நபர்களுக்கும் பிரம்படி மற்றும் கடுமையான வங்கிச் சேவை முடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் அல்லது போலீசார் ஒருபோதும் பொதுமக்களிடம் தொலைபேசி வாயிலாகப் பணம் மாற்றச் சொல்லியோ, வங்கி விவரங்களைக் கேட்டோ அல்லது நகைகளை ஒப்படைக்கக் கோரியோ கேட்க மாட்டார்கள் என்று சிங்கப்பூர் காவல்துறை பொதுமக்களுக்கு மீண்டும் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here