கோலாலம்பூர்:
நாட்டில் ஏற்படும் அவசரக் காலப் பேரிடர்களைத் திறம்பட எதிர்கொள்ளும் வகையில், மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (Bomba) தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான (SAR) உபகரணங்களை நவீனப்படுத்த, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சு இந்த ஆண்டு மட்டும் 267 மில்லியன் ரிங்கிட் நிதியை அதிரடியாக ஒதிக்கியுள்ளது.
இன்று ஹிலிர் பேராக்கில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த ஆற்றுப் படுகை மேம்பாட்டுத் திட்டத்தின் விளக்கக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இத்தகவலை வெளியிட்டார்.
இயற்கைப் பேரிடர்கள் எப்போது தாக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது என்பதால், தீயணைப்புப் படை எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
“தீயணைப்புத் துறை எந்த நேரத்திலும் அவசரச் சூழல்களை எதிர்கொள்ளும் வகையில், 12-ஆவது மலேசியத் திட்டத்தின்கீழ் (RMK-12) முக்கியமான சொத்துக்கள் மற்றும் நவீனத் தளவாடங்களை வாங்குவதற்காக 1.3 பில்லியன் ரிங்கிட் நிதியையும் அமைச்சு அனுமதித்துள்ளது. எனவே, தீயணைப்புப் படையினர் எப்போதும் 100 விழுக்காடு தயார்நிலையில் (100% Standby) இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
தாப்பா (Tapah), கம்போங் லூபோக் கஹாரு அருகே மாயமான 49 வயது மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா சாலுடின் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையின் தேடுதல் திறனை வலுப்படுத்துவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
கடந்த மே 23-ஆம் தேதி 14 பேர் கொண்ட குழுவுடன் ‘டிரான்ஸ் ஸ்பென்சர் சாப்மேன்’ மலையேற்றப் பாதையில் சென்ற ஜாஸ்லிண்டா, மே 24 முதல் மாயமாகி, பலத்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று (ஜூன் 6) உயிருடன் மீட்கப்பட்டார்.
இந்த மீட்பு நடவடிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், “அவர் பத்திரமாக மீட்கப்பட்டதுதான் எங்களது முதல் வெற்றி. எனினும், இந்தத் தேடுதல் வேட்டையின் போது தகவல் தொடர்புக் குறைபாடுகள் போன்ற சில பலவீனங்கள் கண்டறியப்பட்டன. ஒவ்வொரு கூட்டு நடவடிக்கையிலும் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து, எதிர்காலத்தில் அவற்றைச் சரிசெய்து மேம்படுத்துவோம்,” என்று உறுதியளித்தார்.



















