தெலுக் இந்தானின் வரலாற்றுச் சிறப்புமிக்க மணல்மேடு காளியம்மன் ஆலயத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேக விழா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 103 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறைக்கு (JPS) சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளது. இதனால் ஆலயத்திற்கு நிரந்தர நில உரிமையைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.
ஆலய நிர்வாகம் உடனடியாக நில விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதுடன், இதுதொடர்பாக மாவட்ட நில அலுவலக அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறினார். விண்ணப்பம் விரைவாக மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
சித்திரைப் பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடும் இந்த ஆலயம், அப்பகுதி இந்து சமுதாயத்தின் முக்கிய ஆன்மிக மையமாக திகழ்கிறது. எனவே, ஆலயத்தின் நிலப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வு கிடைக்க மாநில அரசு உரிய கவனம் செலுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். பேராக் மாநிலத்தில் எந்த ஆலயமும் இடிக்கப்படுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், ஆலய விவகாரங்களில் மாநில அரசு தொடர்ந்து ஆக்கப்பூர்வமான தீர்வுகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

இருப்பினும், சில ஆலய நிர்வாகங்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தவறுவதால் சிக்கல்கள் நீடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆலய நிர்வாகங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டால் நிலப் பிரச்சினைகள், இடமாற்றங்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு எளிதில் தீர்வு காண முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே பல ஆலயங்களுக்கு நிலம் வழங்கப்பட்டதோடு, சில ஆலயங்களின் இடமாற்றம் , சிலைகள் மாற்றம் தொடர்பான செலவுகளையும் மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஆலயங்களுக்கு மாநில அரசு அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனவும் உத்தான் மெலிந்தாங்கில் அமைந்துள்ள மேல்மருத்துவர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டு பூமிபூஜை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக எனவும் அவர் எடுத்துக்காட்டினார். முறையான விண்ணப்பங்கள் மற்றும் சட்டரீதியான நடைமுறைகள் பின்பற்றப்படும் பட்சத்தில், எந்த வழிபாட்டுத் தலத்திற்கும் மாநில அரசு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மணல்மேடு காளியம்மன் ஆலயத்தின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகப் பணிகளுக்காக மாநில அரசு இதுவரை மூன்று கட்டங்களாக மொத்தம் ரிம1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன் அறிவித்தார். விழாவில் பேசிய ஆலயத் தலைவர் பிரகாஷ், ஆலய வளர்ச்சிக்கும் கும்பாபிஷேக ஏற்பாடுகளுக்கும் பெரும் பங்களிப்பு வழங்கிய டத்தோ சிவநேசனுக்கும் பேராக் மாநில அரசுக்கும் நன்றியைத் தெரிவித்தார். ஆலய நிலம் தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆலய நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
(எஸ்.லிங்கேஸ்வரன்)








