25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் – அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தல்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், AMRUT, AMRUT 20, ஜல் ஜீவன் மிஷன் (JJM), JJM 20 மற்றும் SBM 2.0 உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களுடன் பன்னாட்டு நிதிநிறுவனங்களின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டதோடு, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Urban Challenge Fund (UCF) திட்டம் குறித்தும், இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளைச் செயல்படுத்த வாய்ப்புள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்துத் திட்டங்களும், குறித்த காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், Urban Challenge Fund திட்டத்தின் கீழ் புதிய திட்டங்கள் உரிய காலவரையறைக்குள் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மாநில அரசின் முக்கிய முன்னோடித் திட்டங்களான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், சிங்காரச் சென்னை 2.0, நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

நகர உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர மற்றும் ஊரக திட்டமிடல் இயக்ககம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் திட்டங்களுக்குத் துணையாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படும். இத்திட்டம் குடிநீர் வழங்கல், பாதாளச் சாக்கடை, மழைநீர் வடிகால், போக்குவரத்து, சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றத் தாங்குதிறன் உள்ளிட்ட முக்கிய நகர்ப்புற உட்கட்டமைப்புத் துறைகளை ஒருங்கிணைத்து, நிலையான மற்றும் ஒருங்கிணைந்த நகர வளர்ச்சியை உறுதிசெய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

25 மாநகராட்சிகளிலும் 24 மணி நேரமும், 7 நாட்களும் (24×7) தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமெனவும், மேலும், 146 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளிலும் குடிநீர் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, தினசரி குறைந்தபட்சம் 3 மணி நேரம் குடிநீர் வழங்குவதை உறுதிசெய்து 5 ஆண்டுகளுக்குள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நிறைவேற்றப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

சென்னை மாநகரம் அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகிய மூன்று முக்கிய நீர்வழித்தடங்களால் சூழப்பட்டுள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள அடையாறு மறுசீரமைப்பு திட்டத்துடன் இணைந்து, கூவம் ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இத்திட்டங்கள் கழிவுநீர் கலப்புகளைத் தடுத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடுதல், மாசுபாட்டைத் தடுப்பது, கரைகளை வலுப்படுத்துதல், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், சூழலியல் கரையோர மேம்பாடு, பல்லுயிர்ப்பெருக்கம் ஆகியவற்றை உள்ளடக்கும். இதன் மூலம் நீல பசுமை வளாகங்கள் உருவாக்குவது தொடர்பாக ஆய்வுசெய்து உடனடியாக இத்திட்டத்தினைச் செயல்படுத்திட வேண்டும்.

முதல்-அமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டம் 2026-2031 (Chief Ministers Integrated Urban Transformation Mission CMIUTM) எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அனைத்து நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடைக் கட்டமைப்பு, திடக்கழிவு மேலாண்மை. நகர்ப்புற சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், நகர்ப்புற பசுமை வளர்ச்சி, நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாடு, சமூக உள்கட்டமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு, டிஜிட்டல் நகர்ப்புற நிர்வாகம், பொது சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்குமென்றும், இத்திட்டத்திற்கு ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான நிதி ஆதாரம், ஒன்றிய அரசின் திட்டங்கள், தமிழ்நாடு அரசின் திட்டங்கள். நகராட்சிப் பத்திரங்கள் (Municipal Bonds), மாநில நிதிக்குழு மானியங்கள், மத்திய நிதிக்குழு மானியங்கள். பன்னாட்டு நிதிநிறுவனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து திரட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள இத்தொலைநோக்குத் திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பாராட்டி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் திறமையான கண்காணிப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் உலகத்தரத்திலான நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் குறித்த காலத்திற்குள் அவற்றை நிறைவேற்றுதல் அவசியம் என்றும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here