சமூக நீதிக்கான ஐ.எல்.ஒ-வின் உலகளாவிய கூட்டணியில் இணைந்தது மலேசியா: அமைச்சர் ரமணன்

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஒ) சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணியில் மலேசியா இணைந்துள்ளது.சமூக நீதி மற்றும் சர்வதேச தொழிலாளர் தரநிலைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\இந்த கூட்டணி தொடர்பான பங்கேற்பு கடிதத்தை, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர் கில்பர்ட் எஃப். ஹோங்போவிடம் அமைச்சர் நேற்று ஒப்படைத்தார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் 114-வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோது அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.சமூக நீதி மற்றும் தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், அனைவரையும் உள்ளடக்கிய நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் மலேசிய அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ‘கண்ணியமான வேலை’ கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார்.

மலேசியாவில் இணக்கமான, உள்ளடக்கிய மற்றும் பயனுள்ள முத்தரப்பு சூழலை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். தொழில்துறை உறவுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதில் முதலாளிகள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.இதன் மூலம் நாட்டின் தொழிலாளர் முறை மீது சர்வதேச சமூகத்தின் நம்பிக்கை தொடர்ந்து வலுவாக இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பின் (MEF) தலைவர் டத்தோ டாக்டர் சையத் உசேன் சையத் உஸ்மான், யூனியன் நெட்வொர்க் இன்டர்நேஷனல்-மலேசியா தொழிலாளர் மையத்தின் (UNI-MLC) தலைவர் டத்தோ முகமது ஷாஃபி பிபி மம்மல் மற்றும் மனித வள அமைச்சின் கொள்கை மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் டாக்டர் முகமது ஷஹாரின் உமர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here