இணைய சிறார் பாதுகாப்பு: யார் பொறுப்பு? – சாரா யோங்

(செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இணையச் சட்டம், தரவு பாதுகாப்புக் குழுவின் தலைவர் சாரா யோங் லீ சியேன் (Sarah Yong Li Hsien) அளித்த பேட்டியின் தொடர்ச்சி.)

கே: உங்கள் பார்வையில் சேவை நிறுவனங்கள் தங்கள் சேவைகள் வலுவான பாதுகாப்பு அம்சங்களுடனும் இளம் பயனர்களுக்கான வயதுக்கு ஏற்ற பாதுகாப்புகளுடனும் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்வதில் என்ன பங்கை ஆற்ற வேண்டும்?

ப: உலகளவில் குறிப்பாக மலேசியாவில் தொடர்ச்சியான ஒழுங்குமுறை, கொள்கை மேம்பாடுகள், இளம் பயனர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழல்களை உறுதி செய்வதற்கான அதிகப் பொறுப்பை சேவை நிறுவனங்களே ஏற்க வேண்டும்.

இருப்பினும் இந்த நடவடிக்கைகளின் செயல்திறனும் விகிதாச்சாரமும் இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், மேற்பார்வை, செயல்படுத்தும் வழிமுறைகளைப் பொறுத்தே அமையும்.

சிஎம்ஏ 1998 (தொடர்புடைய அமலாக்க விதிகள் உட்பட) பிடிபிஏ 2010 தரவுப் பாதுகாப்புக் கடமைகள்  சிஎம்சிஎஃப் உள்ளடக்கக் குறியீட்டின் சுய-ஒழுங்குமுறை அதிகரிக்கும் எம்சிஎம்சி உரிமம், ஒழுங்குமுறை மேற்பார்வை
தளப் பொறுப்புக்கூறலை நோக்கிய வளர்ந்து வரும் கொள்கை மாற்றம்.
அதே நேரத்தில் முறையான தகவல் தொடர்புகள், கல்விக்கான அணுகல், சட்டப்பூர்வமான டிஜிட்டல் பங்கேற்பு ஆகியவற்றில் எதிர்பாராத தாக்கங்களைத் தவிர்ப்பதற்காக ஒழுங்குமுறை நடவடிக்கைகள் போதுமான அளவு தெளிவாகவும் துல்லியமாகவும் வடிவமைக்கப்பட வேண்டும்.

பொறுப்புகள் விதிக்கப்படும் இடங்களில் அவை முற்றிலும் தன்னார்வ நடவடிக்கைகளைச் சார்ந்திருப்பதை விடுத்து தெளிவான சட்டத் தரநிலைகள், வெளிப்படைத்தன்மை, பொருத்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள், பொறுப்புக்கூறக்கூடிய மேற்பார்வை வழிமுறைகளுடன் இணைந்திருக்க வேண்டும்.

கே: சட்டத் தொழில் தீங்கு, கவனிப்புக் கடமை, பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை அடிக்கடி கையாளுகிறது. இந்தக் கோட்பாடுகள் டிஜிட்டல் சூழலில் குறிப்பாக இணையத்தில் சிறார்களின் பாதுகாப்பு தொடர்பாக எவ்வாறு பொருந்துகின்றன?

ப: சட்டக் கோட்பாடுகளை டிஜிட்டல் சூழல்களுக்கு மொழிபெயர்ப்பது கடினமான கேள்விகளையும் எழுப்புகிறது:

– கவனிப்புப் பொறுப்பு யாருக்கு உள்ளது? தளங்களுக்கா, பெற்றோருக்கா, பள்ளிகளுக்கா, அரசாங்கங்களுக்கா, அல்லது இவர்கள் அனைவருக்கும் உரியதா?
– எந்த அளவிலான கவனிப்பு நியாயமானது? குறிப்பாக வெவ்வேறு வயது, தொழில்நுட்பச் சூழல்களைச் சார்ந்ததா?
– அல்காரிதமிக் பரிந்துரை அமைப்புகள் அல்லது செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் மூலம் தீங்கு ஏற்படும்போது, பொறுப்பை எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும்?
– கருத்துச் சுதந்திரம், புத்தாக்கத்திற்கு எதிராகக் குழந்தைகளின் உரிமைகளை எவ்வாறு சமநிலைப்படுத்த முடியும்?
பாதிக்கப்படக்கூடிய நபர்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டக் கோட்பாடுகள், ஆஃப்லைனில் செயல்படுவது போலவே டிஜிட்டல் சூழலிலும் பொருந்த வேண்டும்.

மலேசியாவில், சிறார்களைத் தவறாக வழிநடத்துதல், இணையவழி மிரட்டல், சுரண்டல் போன்ற சிறார்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை முன்கூட்டியே கணிக்கக்கூடிய இணையவழித் தீங்குகளைத் தணிப்பதில் தளங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், பிற பங்குதாரர்கள் நியாயமான பொறுப்பைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

கே: உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் சிறார்கள், இளம் பயனர்களை உள்ளடக்கிய இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வரும் நிலையில் இந்தத் துறையில் சட்டம், ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு எந்தக் கொள்கைகள் வழிகாட்ட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ப: சிறார்களின் இணையப் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு சட்டம் அல்லது ஒழுங்குமுறை கட்டமைப்பு, முறையான சிறார் பாதுகாப்பு நோக்கங்களை அரசியலமைப்புச் சுதந்திரங்கள், சிறார்களின் உரிமைகள், விகிதாச்சாரம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் ஆகிய கொள்கைகளுடன் சமநிலைப்படுத்த முயல வேண்டும்.

முக்கிய வழிகாட்டும் கொள்கைகள்:

– முறையான சிறார் பாதுகாப்பு நோக்கங்களை அடைவதற்குத் தேவையானதைவிட நடவடிக்கைகள் அதிக ஊடுருவலாக இருக்கக்கூடாது.

2025 இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கட்டமைப்பு உலகளாவிய கண்காணிப்பைக் கட்டாயப்படுத்துவதற்கோ அல்லது அனைத்துப் பயனர்களிடமிருந்தும் மொத்தமாகத் தரவுகளைச் சேகரிப்பதற்கோ பதிலாக தளங்கள் சிறார்களுக்கு ஏற்படும் தீங்கு அபாயங்களை மதிப்பிட்டுத் தணிக்க வேண்டும் என்று கோருவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது.

இந்தச் சட்டத்தின் கீழ் உருவாகி வரும் குழந்தை பாதுகாப்பு நெறிமுறை கட்டமைப்பு, வயது வந்த பயனர்களின் சட்டப்பூர்வமான செயல்பாடுகளில் அதிகப்படியாகத் தலையிடும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளைக் காட்டிலும் அபாயம் சார்ந்த பாதுகாப்புகளை (எ.கா.: குழந்தைகளிடையே பிரபலமான சேவைகளுக்குக் கடுமையான அமைப்புகள்) கருத்தில் கொள்வதாகத் தெரிகிறது.

தனியுரிமை, கருத்துச் சுதந்திரத்தில் ஏற்படும் தலையீட்டைக் குறைக்கும் அதே வேளையில் சிறார்களைப் பாதுகாக்கும் தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

கே: இணையப் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் ஒரு சமச்சீரான, பயனுள்ள அணுகுமுறையை உறுதிசெய்ய சட்டமியற்றுபவர்கள், ஒழுங்குமுறையாளர்கள், சட்டத்துறை, கல்வியாளர்கள், பெற்றோர், பொதுச் சமூகம், டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியமானது?

ப: இதில் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது. இணையத்தில் சிறார்கள் எதிர்கொள்ளும் பன்முக அபாயங்களை எந்தவொரு தனி நபராலும் முழுமையாகக் கையாள முடியாது.

– சட்டமியற்றுபவர்களும் ஒழுங்குமுறைப்படுத்துபவர்களும் சட்டக் கட்டமைப்புகளையும் அமலாக்கத்தையும் வழங்குகிறார்கள்.
– தளங்கள் பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்துகின்றன.
– கல்வியாளர்களும் பெற்றோரும் குழந்தைகளின் நடத்தையை வடிவமைக்கும் நடைமுறைகளைச் செயல்படுத்துகிறார்கள்.
– பொதுச் சமூகம் பரிந்துரை, ஆதரவு சேவைகள், சுதந்திரமான ஆய்வை வழங்குகிறது.
– சட்டத் தொழில் சட்டப் பகுப்பாய்வு, உரிமைகளுக்கான பாதுகாப்புகள், பரிகாரங்களுக்கான அணுகலை வழங்குகிறது.
ஒருதலைப்பட்சமான நடவடிக்கையைவிட பலதரப்பட்ட பங்குதாரர்களின் உரையாடல் அதிக நடைமுறைக்கு உகந்த, உரிமைகளை மதிக்கும், தொழில்நுட்ப ரீதியாகத் தகவலறிந்த கொள்கைகளை உருவாக்குகிறது.

வழக்கறிஞர் மன்றத்தின் குழுக்கள், டிஜிட்டல் எழுத்தறிவு, துஷ்பிரயோகம் குறித்து புகாரளித்தல், சட்டத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த அமர்வுகள் உட்பட இணையவழி குழந்தை பாதுகாப்பு பற்றிய உரையாடல்களில் அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வியாளர்கள், அனைத்துலக கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளன.

கே: தனியுரிமை, தகவல் பெறும் உரிமை, கருத்துச் சுதந்திரம், உரிய சட்ட நடைமுறை போன்ற அடிப்படை உரிமைகளை மதிக்கும் வகையில் சிறார்களுக்கான இணையப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை எவ்வாறு செயல்படுத்த முடியும்?

ப: ஒழுங்குமுறை அணுகுமுறைகளில் தள வழங்குநர்கள் பாதுகாப்பான இணைய வடிவமைப்பு நடவடிக்கைகள் அல்லது சூழல்களைப் பின்பற்றக் கோருவது அடங்கும். அவற்றுள்:
– சிறார்களுக்கான தனியுரிமைப் பாதுகாப்பு இயல்புநிலைகள், சிறார்களிடமிருந்து குறைந்தபட்ச தரவு சேகரிப்பு, சிறார்களை வகைப்படுத்துதல், இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களுக்கு எதிரான வலுவான பாதுகாப்புகள்.
– வயதுக்கு ஏற்ற இடைமுகங்கள், அர்த்தமுள்ள, வெளிப்படையான, பயன்படுத்த எளிதான உள்ளடக்க மதிப்பீடு, பெற்றோர் கட்டுப்பாடுகள்.
– வலுவான பாதுகாப்பு அம்சங்கள்: புகாரளிக்கும் வழிமுறைகள், துஷ்பிரயோகம் அல்லது சுரண்டல் பற்றிய புகார்களுக்கு விரைவான பதில், சிறார்-பாதுகாப்பான தேடல் கருவிகள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பெருக்குவதைத் தவிர்ப்பதற்கான வழிமுறை சார்ந்த பரிசீலனைகள்.
– உள்ளடக்க மிதப்படுத்தல், தரவுப் பயன்பாடு, வழிமுறை சார்ந்த தாக்கங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை, பொருத்தமான பொறுப்புக்கூறல், சுதந்திரமான மேற்பார்வை வழிமுறை.
மலேசிய வழக்கறிஞர் மன்றம் வயது சரிபார்ப்பு நடவடிக்கைகள் உட்பட எந்தவொரு சிறுவர் இணையப் பாதுகாப்பு முயற்சிகளும் சட்டப்பூர்வமாக அடிப்படையானதாகவும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டதாகவும் வலுவான பாதுகாப்புகள், சுதந்திரமான மேற்பார்வைக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

கே: சிறார்கள், இளைஞர்களுக்காகப் பாதுகாப்பான, அதிகப் பொறுப்புள்ள, வயதுக்கு ஏற்ற டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கான கூட்டுப் பொறுப்பு குறித்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் பெற்றோருக்கும் பொதுமக்களுக்கும் என்ன செய்தியைப் பகிர விரும்புகிறது?

ப: பெற்றோர், பராமரிப்பாளர்கள், பொதுமக்கள் ஒரு முக்கியப் பங்காற்றினாலும், அர்த்தமுள்ள சிறார் இணையப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான தள வடிவமைப்பு, தெளிவான ஒழுங்குமுறைத் தரநிலைகள், டிஜிட்டல் கல்வி முயற்சிகள், பாதிப்புகளுக்கான எளிதில் அணுகக்கூடிய தீர்வுகள் ஆகியவையும் தேவைப்படுகின்றன.

இணைய அபாயங்கள் குறித்துக் குழந்தைகளுடன் தீவிரமாக உரையாடவும் கிடைக்கக்கூடிய தனியுரிமை, பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தவும் டிஜிட்டல் கல்வியை ஆதரிக்கவும் சந்தேகிக்கப்படும் தவறான பயன்பாட்டைப் புகாரளிக்கவும் மலேசிய வழக்கறிஞர் மன்றம் பெற்றோரையும் பராமரிப்பாளர்களையும் ஊக்குவிக்கிறது.

இணையத்தில் குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது இறுதியில் ஒரு கூட்டுப் பொறுப்பாகும். இதற்கு அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் உரிமைகளை மதிக்கும், சான்றுகளின் அடிப்படையிலான, விகிதாச்சாரமான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here