ஜோகூர், ஸ்கூடாயில், போதையில் இருந்தபோது இடையூறு ஏற்படுத்தியதற்காக ஒரு இ-ஹெய்லிங் ஓட்டுநர் கண்டித்த போது அவரை தாக்கிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர். இஸ்கண்டார் புத்ரி காவல் நிலையத் தலைவர் எம். குமரேசன் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பான ஒன்பது வினாடி காணொளி ஒன்று ஃபேஸ்புக்கில் வைரலானதைத் தொடர்ந்து, 56 வயதான அந்த ஓட்டுநர் நேற்று காலை சுமார் 11.10 மணியளவில் புகார் அளித்தார்.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில், வெளிநாட்டினர் என நம்பப்படும் அந்த மூவரையும் ஓட்டுநர் வாகனத்தில் ஏற்றியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் அவர். பயணத்தின் போது, பயணிகள் போதையில் இருந்ததாகவும், வாகனத்திற்குள் சத்தம் போட்டதாகவும் கருதப்பட்டதால், பாதிக்கப்பட்டவர் அவர்களைக் கண்டித்துள்ளார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். அந்தக் கண்டனத்தால் அதிருப்தியடைந்த சந்தேக நபர்கள், பாதிக்கப்பட்டவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஜோகூர் ஸ்கூடாயில் உள்ள தாமான் துன் ஸ்ரீ யாக்கோப் பகுதியில் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் 323ஆவது பிரிவின் கீழ் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல் மற்றும் 506ஆவது பிரிவின் கீழ் குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்தக் காணொளியில், ஒரு பயணியால் இ-ஹெய்லிங் ஓட்டுநர் தாக்கப்படுவதும், பாதிக்கப்பட்டவருக்கு வாயில் இருந்து இரத்தம் வழிவதும், கண்ணுக்கு அருகில் காயங்கள் இருப்பதும் பதிவாகியிருந்தது.









