நெகிரி செம்பிலான், சிரம்பானில் தனது மூன்று வயது வளர்ப்பு மகனைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் 24 வயது நபர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. சிகிச்சைக்காக குழந்தை துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் நேற்று இரவு 8.30 மணிக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக சிரம்பான் காவல் துறைத் தலைவர் யாதிம் உஸ்மான் கூறினார்.
ஒரு பெட்ரோல் நிலையத்தில் காரில் வைத்து சந்தேக நபரால் பாதிக்கப்பட்ட குழந்தை உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக நம்பப்படுவதாக அவர் கூறினார். ஜாலான் ராசாவில் உள்ள ஒரு வீட்டில் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை பலமுறை தாக்கியதில், அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததும் எங்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவரை உடல்ரீதியாகப் பரிசோதித்தபோது, அவரது உடலின் முன்புறத்திலும் பின்புறத்திலும் காயங்கள் இருந்தன; அவை கிள்ளியதால் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
பின்னர், மருத்துவமனைக்கு முன்பாக சந்தேக நபரை காவல்துறை கைது செய்ததாகவும், அவரும் பாதிக்கப்பட்டவரின் தாயும் ஏப்ரல் மாதத்தில்தான் திருமணம் செய்துகொண்டார்கள் என்றும் யதிம் கூறினார். குழந்தை துஷ்பிரயோகம் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக, சந்தேக நபர் ஜூன் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதே சமயம், பாதிக்கப்பட்டவர் மேலதிக சிகிச்சைக்காக துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையில் உள்ளார்.








