டெலிகிராம் மீதான தடை எதிரொலி… வி.பி.என். குறித்து தேடும் இந்தியர்கள் – கூகுள் வெளியிட்ட தகவல்

நியூயார்க், இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.

ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்து, விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் நடந்து முடிந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.

நீட் மறுதேர்வு

நீட் மறுதேர்வு, வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. வினாத்தாள்கள் மீண்டும் கசியாமல் இருக்க இந்த முறை பல அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள், இன்டர்நெட் வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

டெலிகிராம் செயலி

இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மே 3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியதால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தகவல் தொழில்நுட்ப சட்டம் (ஐ.டி. சட்டம்), 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால விதிகளை பயன்படுத்தி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், டெலிகிராமில் ஏற்கெனவே அனுப்பப்பட்ட செய்திகளை திருத்தும் வசதியை (message-editing feature) வருகிற 30-ந்தேதி வரை முடக்குமாறு அந்த தளத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வி.பி.என். குறித்து தேடல்

இந்த நிலையில், டெலிகிராம் செயலி மீதான தடை எதிரொலியாக இந்தியர்கள் தற்போது வி.பி.என்.(VPN) குறித்து அதிக அளவில் தேடத் தொடங்கியுள்ளனர் என கூகுள்(Google) நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் தேடுபொறியில் 24 மணி நேரத்தில் வி.பி.என். தேடல் குறித்த ‘கூகுள் டிரெண்ட்’(Google Trend) பூஜ்ஜியத்தில் இருந்து 5, 28 என உயர்ந்து 100-ஐ எட்டியுள்ளது.

‘கூகுள் டிரெண்ட்’ என்பது பயனர்களின் தேடல்களின் அடிப்படையில், பூஜ்ஜியத்தில் இருந்து 100 வரையிலான அளவுகோலால் மதிப்பிடப்படுகிறது. இதில் 24 மணி நேரத்தில் வி.பி.என். குறித்த தேடல் இந்தியாவில் 100-ஐ எட்டியிருப்பதன் மூலம், இந்தியர்கள் மாற்று வழிகளில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர் என்பதையே காட்டுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here