மாறா எனும் விண்மீன் பிரத்தியேகத் தொடரின் மூலம் சமூக வலைத்தளங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் நெறிமுறையான பயன்பாடு உட்பட இளைஞர்களிடையே பாதுகாப்பான இணையப் பயன்பாட்டு நடைமுறைகளின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம், பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ, மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் (MCMC) உடன் கைகோக்கிறது.
இந்த டெக்னோ-திரில்லர் தொடரான ‘மாறா’, ஜூலை 6 இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட், சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்பு காணுகிறது.
ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர் பிரேம் ஆனந்த் கூறுகையில், முன்னணி உள்ளூர் உள்ளடக்கம், பொழுதுபோக்குப் பிராண்டாக, உயர்தரத் தாய்மொழி கதைசொல்லலை உயர்த்துவதிலும் உள்ளூர் திறமைகள் வளரக்கூடிய அர்த்தமுள்ள தளங்களை உருவாக்குவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக, 2026 பிப்ரவரி முதல் எங்களின் புதிய உள்ளூர் தமிழ் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை முழு ஒரு மணி நேரமாக நீடித்துள்ளோம். இதன் மூலம் உள்நாட்டுப் படைப்பாளிகளுக்குச் செழுமையான கதைசொல்லல், கூடுதல் வாய்ப்புகள் கிடைப்பது சாத்தியமாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
பொழுதுபோக்கைத் தாண்டி, நேர்மறையான சமூகத் தாக்கத்திற்கான ஒரு சக்தியாக உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி, ‘நன்மைக்கான குரல்’ என்ற கூற்றின் மூலம் சுற்றுச்சூழல், சமூக, ஆட்சி (ESG) செயல்திட்டத்தைத் தொடர்ந்து நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்.
விருது வென்ற உள்ளூர் திரைப்பட இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ஜெயமூர்த்தி ஜெபி இயக்கித் தயாரித்த இந்த ‘மாறா’ தொடரின் வழி காலத்திற்குத் தேவையான மின்னியல் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் இந்த முயற்சியில் மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்துடன் கூட்டாண்மையில் இணைவதில் நாங்கள் பெருமை அடைகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆணையம் இதுகுறித்து கூறுகையில், பாதுகாப்பான இணையப் பயன்பாட்டுக்கான பிரச்சாரம், இணையவழிப் பாதுகாப்பு, பொறுப்பான டிஜிட்டல் பயன்பாடு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை வலுப்படுத்துவதில் தொடர்ந்து உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சாரம், அனைத்துப் பயனர் குழுக்களையும் குறிப்பாகக் குழந்தைகள், குடும்ப அமைப்புகளுக்கு இணையப் பாதுகாப்பைப் பற்றித் தகவலளிக்கும் தொடர்ச்சியான முயற்சியாகும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
‘மாறா’ தொடரில் டிஷாலனி ஜாக், புனிதா சண்முகம், திவ்யா கியா, சத்யா காந்தி, கே. பிரகாஷ் உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.






















