கரூர், முதல்-அமைச்சர் விஜய் செய்துள்ள இந்த உதவியின் மூலமாக அவரை எனது மகனாகவே பார்க்கிறேன் என்று ஞானாம்பாள் உருக்கமாக தெரிவித்தார்.
பணி நியமன ஆணை
கரூரில் கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்துக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் இன்று பிற்பகல் நேரில் வழங்கினார்
இந்த பணி நியமன ஆணையை பெறுவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவுக்கு காலையிலேயே வந்திருந்தனர். அவர்கள் தங்களது குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் அரசு வேலை வழங்கி இருப்பது மிகப்பெரிய ஆறுதலாக தெரிவித்தனர்.
கரூர் நெரிசலில் ஞானாம்பாள் என்பவரது மகனும் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகளுக்கு பணி நியமன ஆணை இன்று வழங்கப்பட்டது. அதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த ஞானாம்பாள் கண்ணீர் மல்க காட்சியளித்தார்.
எனது மகன்
முதல்-அமைச்சர் விஜய் செய்துள்ள இந்த உதவியின் மூலமாக அவரை எனது மகனாகவே பார்க்கிறேன். என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞானாம்பாள் கூறும்போது, ‘எனக்கு அரசு வேலை தருவதாக கூறினார்கள்.
நான் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். வயதும் 50 ஆகப் போகிறது. எனவே எனது மகளுக்கு அரசு வேலை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்றுக்கொண்டு மகளுக்கு அரசுப்பணி வழங்கி உள்ளனர். எனது மகள் என்னை கடைசி வரை பார்த்துக் கொள்வாள்.
எனது மகள் டிகிரி முடித்துள்ளார். கரூர் சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்பு கருதி விஜய் வரவில்லை. இப்போது முதல்-அமைச்சராக அவர் வந்திருப்பது சந்தோஷமாக உள்ளது’ என்றார்.
பொது மக்கள் நெகிழ்ச்சி
கரூர் நெரிசலில் முருகேசன் என்பவரது மனைவி ரேவதி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது மகனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகேசன் கூறும்போது. ‘எனது மகனுக்கு அரசு வேலை தருவது ஆறுதல் அளிக்கிறது. கடைசி வரை எங்களை நன்றாக பார்த்துக் கொள்வதாக முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
அவரையும் நாங்கள் கடைசிவரை பார்த்துக் கொள்வோம்’ என்றார்.
முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் கரூருக்கு வருகை தந்தது பற்றி பொது மக்கள் பலரும் நெகிழ்ச்சியுடன் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, ‘ஒரு கட்சியின் தலைவராக கரூருக்கு வந்திருந்த விஜய், தற்போது தமிழகத்தின் அரியணையில் முதல்- அமைச்சராக அமர்ந்து அடியெடுத்து வைப்பது தங்களுக்கு கிடைத்த பெருமை என்றும், விஜய் பிரசாரத்துக்கு வரும் போது போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில் அவர் தற்போது முதல் – அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விழா நடக்கும் இடம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு இருப்பதை பார்க்கும்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது உள்ளது’ என்று தெரிவித்தனர்.
பெண்கள் பாதுகாப்பு
முதல்-அமைச்சர் விஜய்யின் 50 நாள் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு கொண்டு வந்துள்ள ‘சிங்கப்பெண் திட்டம்’ மற்றும் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ ஆகியவை தங்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்றும், தங்கள் பகுதியில் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பது நிம்மதி அளிப்பதாகவும் கூறினார்கள்.
தற்போது 10 மணிக்கு மேல் மதுக்கடைகளின் வாசலில் போலீசார் கட்டாயப் பணியில் ஈடுபட்டு, சட்ட விரோத மது விற்பனையை முற்றிலும் ஒழித்துள்ளதால், இரவு நேரங்களில் அச்சமின்றி நடமாட முடிகிறது எனவும் விஜய்யை பார்க்க வந்திருந்த பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
தவெக அரசு மாற்றம்
போதைப்பொருள் புழக்கம் மற்றும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்துச் சமூக வலைத்தளங்களில் புகார்கள் தெரிவித்தால், அதிகாரிகள் வருவதற்கு முன்பாகவே த.வெ.க.வினர் களத்தில் இறங்கி பிரச்சினை களைத் தீர்த்து வைப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
இப்படி முதல்- அமைச்சர் விஜய்யை பார்க்க வந்திருந்த பெண்கள் பலர் தமிழகத்தில் த.வெ.க. அரசு மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பாராட்டினர்.








