மலேசியா விமானப் பயணிகளின் பாதுகாப்பும் அவர்களின் உயிர்களும் மிகவும் விலமதிப்பற்றவை. எனவே, விமான நிறுவனங்கள் போதைப்பொருள், புகையிலை மற்றும் மதுப்பழக்கம் இல்லாத, ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் கொண்ட விமானிகளையே பணியமர்த்த வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் விடுத்துள்ள அறிக்கையில் ஜகார்த்தாவில் உள்ள சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், மலேசியாவைச் சேர்ந்த 39 வயது விமானி ஒருவர் சுமார் 25 கிலோகிராம் எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் ஷாபு உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்த முயன்றபோது இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், சர்வதேச போதைப்பொருள் கும்பலின் ஏஜென்ட்டாகச் செயல்பட்டு, பலமுறை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையிலும் அவர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் மலேசிய விமானத் துறைக்கே ஏற்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளியாகவும் அவமானமாகவும் அமைந்திருக்கிறது. விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தங்கள் உயிரைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் கடவுளாகவே விமானியை நம்புகிறார்கள். அப்படிப்பட்ட உயரிய பொறுப்பில் இருப்பவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ஒரு சில விமானிகளின் ஒழுக்கமற்ற மற்றும் பொறுப்பற்ற செயல்பாடுகள், திறம்படச் செயல்படும் மற்ற நற்பெயர் கொண்ட விமானிகளின் கௌரவத்தைக் காயப்படுத்தக் கூடாது. எனவே, எதிர்காலத்தில் இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் பின்வரும் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.
மலேசிய விமான நிலையங்களில், குறிப்பாகக் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சோதனைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும். கடுமையான மருத்துவப் பரிசோதனையும் தேவை. எதிர்காலத்தில் விமானிகள் மற்றும் துணை விமானிகள் தங்களின் இருக்கைகளில் அமர்ந்து விமானத்தை இயக்குவதற்கு முன்பாக, அவர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்யும் கடுமையான முன்னெச்சரிக்கை சோதனைகளை விமானத் துறை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்தோனேசியச் சட்டப்படி போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. பயணிகளின் உயிரோடு விளையாடாமல், விமானத் துறை உடனடியாக விழித்துக்கொண்டு தகுதியான விமானிகளை மட்டுமே பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்.வி.சுப்பாராவ் குறிப்பிட்டார்.
செ.குணாளன்
ஜார்ஜ்டவுன், ஆக.5 –










