மலேசியா – ஆசியான் பிராந்தியத்தில் டிஜிட்டல் கொள்கையை முறைப்படுத்தும் திறனை வலுப்படுத்த MCMC – MMU உயர்மட்டப் பயிற்சி

கூச்சிங்.

மலேசிய தகவல், தொடர்பு பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி), மல்டிமீடியா பல்கலைக்கழகம் (எம்எம்யு), MMU CNERGY ஆகியவற்றுடன் இணைந்து, ‘ஒருங்கிணைந்த தொலைத்தொடர்புக் கொள்கை, ஒழுங்குமுறைகள் (CTPR) 2026′ உயர்மட்டப் பயிற்சி வகுப்பின் (Masterclass) முதல் சரவாக் பதிப்பைத் தொடங்கியது. இது கிழக்கு மலேசியாவில் டிஜிட்டல் கொள்கை மேலும் முறைப்படுத்தும் திறனை விரிவாக்குவதோடு தகவல், தொடர்பு, டிஜிட்டல் சட்டதிட்டங்களில் பிராந்திய அளவில் மலேசியாவின் முன்னணிப் பங்கை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

ஜூலை 27 முதல் 31 வரை கூச்சிங்கில் உள்ள புல்மேன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஐந்து நாள் பயிற்சி வகுப்பை சரவாக் தொலைத்தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜி ஸுலைஹி ஹாஜி நராவி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

அடுத்த தலைமுறை இணைப்பு, பல்லூடகத்தை சாத்தியமாக்குதல்: 5ஜி, செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள், அதற்கும் அப்பால் – எதிர்கால டிஜிட்டல் வளர்ச்சிக்கான கொள்கைகள் என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பு, அரசாங்கங்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்களுக்குப் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த புரிதலை வலுப்படுத்த ஒரு முக்கியத் தளத்தை வழங்குகிறது.

மேலும் இது புதுமைகளை ஊக்குவிக்கவும், முதலீடுகளை எளிதாக்கவும், டிஜிட்டல் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயனீட்டாளர் நம்பிக்கையை வலுப்படுத்தும் சுறுசுறுப்பான, எதிர்காலத்திற்கு ஏற்ற கொள்கை கட்டமைப்புகளை உருவாக்க உதவுகிறது.

தொலைத்தொடர்பு, ஒளிபரப்பு, இணையத் தளங்கள், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கைக்கோள் தகவல், தொடர்பு ஆகியவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து வருவதால், ஒழுங்குமுறைத் திறனையும் தலைமையையும் வளர்ப்பது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அப்பால் வேகமாக மாறிவரும் டிஜிட்டல் சூழலுக்கு ஏற்பச் செயல்பட கொள்கை வகுப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தேவையான அறிவு, திறன்கள், மூலோபாயப் பார்வைகளை வழங்கி நிறுவனத் திறனை வலுப்படுத்துவதில் நாடுகள் முதலீடு செய்ய வேண்டும்.

இந்தத் தொடக்கப் பதிப்பு, மலேசியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் சரவாக்கின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. மேலும் இது டிஜிட்டல் திறமைகளை உருவாக்கவும் ஒழுங்குமுறை சிறப்பை வலுப்படுத்தவும் நாட்டின் நலனுக்காக உள்ளடக்கிய டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தவும் கூட்டரசு அரசாங்கமும் சரவாக் அரசாங்கமும் கொண்டுள்ள பகிர்வு உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பானது மலேசியா, ஆசியான் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வியாளர்களை ஒன்றுசேர்க்கிறது. இது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளவும் சிறந்த ஒழுங்குமுறை நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் வாய்ப்புகள், சவால்களை எதிர்கொள்வதில் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குகிறது.

ஆசியான் முழுவதிலும் உள்ள பிரதிநிதிகளின் பங்கேற்பு, ஒருங்கிணைந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிக்கும் கொள்கை அணுகுமுறைகளை உருவாக்குவதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை மேலும் காட்டுகிறது.

இந்த நிகழ்ச்சியின்போது பங்கேற்பாளர்கள் பிராந்திய, அனைத்துலக நிபுணர்கள் போதிக்கும் கற்றல் அமர்வுகளில் பங்கேற்றனர். இதில் ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை, செயற்கை நுண்ணறிவு ஆளுகை, திறந்த வானொலி அணுகல் வலையமைப்பு, ஆறாம் தலைமுறை தொழில்நுட்ப வளர்ச்சிகள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, அலைவரிசை மேலாண்மை, இணையப் பாதுகாப்பு, தரவு ஆளுகை, உள்கட்டமைப்பு பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகம், நிலையான டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் விவாதிக்கப்படும்.

2015-ல் தொடங்கப்பட்டதிலிருந்து CTPR Masterclass டிஜிட்டல் கொள்கை, புதிய தொழில்நுட்பங்களில் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய நிர்வாக மேம்பாட்டுத் திட்டமாக மாறியுள்ளது. இதுவரை மலேசியா, ஆசியான் முழுவதிலும் உள்ள சுமார் 400 அதிகாரிகளுக்கு இது தொழில்முறை பயிற்சி அளித்துள்ளது.

சரவாக் பதிப்பைத் தொடர்ந்து, CTPR Masterclass 2026 அடுத்தடுத்த கட்டங்களாக கோலாலம்பூர், பினாங்கில் தொடரவுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் கொள்கை, தொலைத்தொடர்புத் துறையில் மலேசியாவின் பிராந்திய மைய நிலையை மேலும் வலுப்படுத்த எம்சிஎம்சி தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here