சாய்வான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லோரி: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கார்கள் மீது விழுந்து விபத்து!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர், பாண்டாய் ஹில்பார்க் (Pantai Hillpark) அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில், பிரேக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த குப்பை லோரி ஒன்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஜாலான் பாண்டாய் முர்னி 1 பகுதியில் இன்று அதிகாலை 4:10 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை (JSPT) தலைவர் உதவி ஆணையர் முகமத் சாம்சுரி முகமத் ஈசா தெரிவித்தார்.

மேடான பகுதியிலிருந்து இறக்கத்தில் வந்துகொண்டிருந்த குப்பை லோரியின் பிரேக் திடீரெனச் செயலற்று போனதாக நம்பப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லோரி, குடியிருப்பு வளாகத்தின் தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு, கீழே நிறுத்தப்பட்டிருந்த ஆளில்லாத 3 கார்கள் மீது கவிழ்ந்தது.

விபத்து நடந்த இடத்தில் ஓட்டுநர் இல்லாததால் காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில், கன்செலார் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையில் (HCTM) இடது காலில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 41 வயது ஓட்டுநரைக் கண்டறிந்தனர். அவருக்கு நடத்தப்பட்ட ஆல்கஹால் பரிசோதனையில் அவர் மது அருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து பிற்பகல் 3:15 மணியளவில் ஓட்டுநர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய லாரி ‘புஸ்பாகோம்’ (Puspakom) சோதனைக்கு அனுப்பப்படவுள்ளது. 1987-ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 43(1)-ன் கீழ் இச்சம்பவம் குறித்துப் போக்குவரத்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here