(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத்தின் பாரஸ்ட் சிட்டியில் செயல்பட்டு வரும் நெட்வொர்க் ஸ்கூல் தொடர்பாக அண்மையில் எழுந்துள்ள விவகாரம் குறித்து, நாட்டிற்குள் வெளிநாட்டினர் நுழைவு தொடர்பான அனைத்து விஷயங்களும் உள்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டவை என்று ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு மக்கோத்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக ஜோகூர் மாநில அரசும், உள்ளூராட்சி அதிகாரிகளும் விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
அந்த விசாரணையின் போது சட்டங்கள், உரிம நிபந்தனைகள் அல்லது நடைமுறையில் உள்ள விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

தேவையெனில், அந்த நிறுவனத்தின் ஜோகூரில் செயல்படும் உரிமம் அல்லது செயல்பாட்டு அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துங்கு இஸ்மாயில் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
பாரஸ்ட் சிட்டியில் இயங்கி வரும் நெட்வொர்க் ஸ்கூல் தொடர்பாக அண்மையில் பல்வேறு தரப்பினரிடையே கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மாநில அரசு சட்டத்தின் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும், சட்ட மீறல்கள் நிரூபிக்கப்பட்டால் எந்தவித சமரசமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இந்த அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.




















