மியான்மரில் புத்த மடாலயம் தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு

நேபிடா, மியான்மரின் மத்திய பகுதியில் உள்ள சாகைங் பிராந்தியத்தில் புத்த மடாலயம் மீது ராணுவ விமானம் நடத்திய வான்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

மியாங் நகரில் இருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்வெல் லே ஓ(Swel Le Oh) என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அங்குள்ள புத்த மடாலயத்தில் ஒரு வார கால தியான நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை சுமார் 9 மணியளவில் மடாலய வளாகத்துக்குள் ராணுவ விமானம் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. சுமார் 15 நிமிட இடைவெளியில் 2 குண்டுகள் வீசப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதில் 3 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

2-வது குண்டு மடாலயத்துக்கு அருகே இருந்த ஒரு வீட்டையும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பிறகு அப்பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து ராணுவத்துக்கும் ஜனநாயக ஆதரவு அமைப்புகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிக்கடி வான்தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்கள் குறித்து ஐ.நா. விசாரணையாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர். வீடுகள், பள்ளிகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக ஐ.நா. விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here