இஸ்ரேல் மாபியா தலைவன் பட்டப்பகலில் சுட்டுக்கொலை; 3 பேர் கைது

டெல் அவிவ் இஸ்ரேலின் கொடூர குற்றவாளி யானிஸ் யஷ்வயேவ் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இஸ்ரேலில் பல ஆண்டுகளாக துப்பாக்கி சூடு, எறிகுண்டு தாக்குதல்கள், கார்களுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவர் என போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் யானிஸ் யஷ்வயேவ் (வயது 40).

இவரை போலீசார் பல முறை கைது செய்தபோதும், தண்டனையில் இருந்து தப்பி வந்துள்ளார். கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்ததுடன், பல வழக்குகளில் போலீசாருக்கு சவாலாக இருந்தவர்.

தொழிலதிபருக்கு மிரட்டல்

இதில், 2021-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரிடம் 11 லட்சம் டாலர் பணம் கேட்டு மிரட்டியதுடன், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். 2025-ம் ஆண்டில் பல்வேறு வீடுகள் மற்றும் வர்த்தக மையங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டார்.

சமீப ஆண்டுகளாக பல்வேறு முறை கும்பல் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர். 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பியவர். காகாசியன் மாபியா என பரவலாக அறியப்படும் கும்பலின் தலைவனாக செயல்பட்ட இவரை கொடூர குற்றவாளி என போலீசார் அறிவித்தது.

மர்ம நபர்

இந்நிலையில், எரிவாயு நிலையத்தில் இருந்து 2 நபர்களுடன் பாதுகாப்பாக வெளியேறியபோது, பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் பட்டப்பகலில் மிக நெருக்கத்தில் துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்து விட்டு தப்பினார். அப்போது, உடனிருந்த 2 பேரும் பயத்தில் ஓடி, ஒளிந்து உயிர் தப்பினர். இந்த புகைப்பட காட்சி வைரலானது.

இந்த சம்பவத்தில், அந்த இடத்திலேயே யஷ்வயேவ் பலியானார். இதுதொடர்பான வழக்கில், 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here