விமானத்தின் சக்கரப் பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரைத் தேடும் காவல்துறையினர்

ஆகஸ்ட் 27 அன்று ஜப்பானின் டோக்கியோவிலிருந்து கே.எல்.ஐ.ஏ (KLIA) முனையம் 2-க்கு வந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில் (wheel-well) சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபரின் உறவினர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இறந்தவரின் புகைப்படம் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளது. ஆனால் அவரது அடையாளம் இன்னும் தெரியவில்லை. இது குறித்துப் பேசிய கே.எல்.ஐ.ஏ காவல் நிலையத் தலைவர் எம். ரவி, ‘திடீர் மரணம்’ தொடர்பான விசாரணை கோப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவரை அடையாளம் காணவும் விசாரணையை நிறைவு செய்யவும் அவரது குடும்பத்தினர் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 19 முதல் காணாமல் போன அல்லது தொடர்புகொள்ள முடியாத குடும்பத்தினர் அல்லது அறிமுகமானவர்கள் யாரேனும் இருந்தால் – குறிப்பாக அவர்கள் கே.எல்.ஐ.ஏ பகுதிக்கு அருகில் இருந்ததாகத் தெரிந்தால் – பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்  என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

விமானம் கே.எல்.ஐ.ஏ முனையம் 2-ல் தரையிறங்கிய பிறகு, சக்கரப் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதை கவனித்த பொறியியல் குழுவினர் அந்த நபரின் சடலத்தைக் கண்டெடுத்தனர். சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவரிடம் எந்தவிதமான அடையாள ஆவணங்களும் கண்டெடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here