கோலாலம்பூர்:
இன்று செப்டம்பர் 16-ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்படும் மலேசிய தினத்தை முன்னிட்டு, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா ஆகியோர் அனைத்து மலேசிய மக்களுக்கும் தங்களது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட சிறப்புச் செய்தியில், தாய்நாட்டின் அமைதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் மாமன்னர் தம்பதியர் சிறப்புப் பிரார்த்தனையை முன்வைத்துள்ளனர்.
“நமது அன்பு மலேசியா தொடர்ந்து இறைவனின் பேரருளைப் பெற்று, நீடித்த அமைதியுடன் திகழ வேண்டும். அனைத்து விதமான இன்னல்கள், துயரங்கள் மற்றும் சவால்களில் இருந்தும் நமது நாடு எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறோம்’ என்று மாமன்னர் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் வாழும் பல்வேறு இனங்கள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் வலுவான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சுட்டிக்காட்டிய மாமன்னர், அதற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்த ஒற்றுமையும் சமூக நல்லிணக்கமுமே நாட்டின் உண்மையான வலிமை என்றும், மலேசியாவின் தொடர் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் இதுவே மிக முக்கியமான அடித்தளம் என்றும் மாமன்னர் தனது வாழ்த்து செய்தியில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.






















