நூறு கோடியில் ஒரு நிகழ்வு! நடுக்கடலில் எதிரெதிர் கப்பல்களில் கேப்டன்களாக தந்தை-மகன்!

மும்பை, பரந்த நடுக்கடலில் எவ்வித போக்குவரத்து சிக்னல்களும் இல்லாத சூழலில், வெவ்வேறு கப்பல்களில் பயணித்த இந்தியாவைச் சேர்ந்த கேப்டன்கள் 2 பேர் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த 2 கேப்டன்களும் ஒருவருக்கொருவர் நெருங்கிய சொந்தமான தந்தை மற்றும் மகன்.

வலைப்படத்தில் தெரிந்த உண்மை

மும்பையைத் தளமாக கொண்டு வணிகக் கப்பலில் ‘கேப்டன்‘ ஆக பணிபுரிந்து வரும் ருஷீல் சரண், வட அட்லாண்டிக் பெருங்கடலில் தனது கப்பலில் வடக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே தெற்கு திசையிலிருந்து ஒரு பிரம்மாண்ட கப்பல் வருவதை அவர் கவனித்தார். கடல்சார் வரைபடம் மற்றும் ரேடார் தரவுகள் மூலம் அக்கப்பலின் விவரங்களை அவர் சோதித்தபோது, அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், எதிரே வந்த அந்த பெரிய கப்பலில் பயணிப்பது வேறு யாருமல்ல, அதே கடல்சார் துறையில் நீண்டகாலமாகப் பணிபுரிந்து வரும் அவரது தந்தை ரவிராஜ் என்பது தெரியவந்தது.

இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்ட மகன்

தகவலறிந்து இரு கப்பல்களும் மிக அருகில் கடந்து சென்றபோது, தந்தையும் மகனும் தங்கள் கப்பல்களின் டெக் பகுதிக்கு வந்து கைகளை அசைத்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்த தற்செயலான அரிய தருணத்தை ருஷீல் சரண் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்து, “நூறு கோடியில் ஒரு வாய்ப்பு என் அப்பாவையும் என்னையும் நடுக்கடலில் இணைத்துள்ளது” என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தந்தையின் உருக்கமான பதிவு

இதற்கு அவரது தந்தை ரவிராஜ் ‘தி கிராஸிங் பாயிண்ட்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள பின்னூட்டத்தில், “இரு வேறு திசைகளில் நமது கப்பல்கள் சென்றாலும், ஒரே கடல் வாழ்க்கையைத் தான் நாம் பகிர்ந்து கொள்கிறோம். என் மகன் இன்று சக கேப்டனாக வளர்ந்து நிற்பதைக் காண்பதில் பெருமிதம் கொள்கிறேன். பத்திரமாக வீடு திரும்பு மகனே!” என உருகியுள்ளார். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் கடலின் நடுவே நிகழ்ந்த இந்த “அபூர்வ சந்திப்பு”, இணையவாசிகளின் இதயங்களை நெகிழச் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here