2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை 3,100 ரிங்கிட்டாக உயர்த்த எம்டியுசி கோரிக்கை

தொழிலாளர்களின் தற்போதைய ஊதியம், உற்பத்தித் திறன் மற்றும் நிறுவனங்களின் லாப வளர்ச்சிக்கு ஏற்ப உயரவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள மலேசிய தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை 3,100 ரிங்கிட்டாக  உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ளது.  தனியார் துறைக்கு அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவதற்கு முன்னதாக, அரசுடன் தொடர்புடைய நிறுவனங்கள் (ஜிஎல்சி) மற்றும் அரசுடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள் (ஜிஎல்ஐசி) ஆகியவை சிறந்த ஊதியத்தை வழங்குவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்றும் எம்டியுசியின் பொதுச் செயலாளர் கமரூல் பஹரின் மன்சோர் கேட்டுக்கொண்டார்.

நியாயமான ஊதியம் என்பது ஜிஎல்சி –  ஜிஎல்ஐசிகளில் இருந்தே தொடங்க வேண்டும். உயர் நிர்வாகத்தினர் மட்டுமே பலனடைவதும், அடிமட்டத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த அளவே கிடைப்பதும் இருக்கக்கூடாது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். பெரிய நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டியும் தொடர்ந்து குறைந்த ஊதியத்தையே வழங்குவதை விமர்சித்த பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கருத்தை கமரூல் வரவேற்றார். அந்த லாபத்தை ஈட்ட உதவிய தொழிலாளர்கள் நியாயமான பங்கைப் பெறத் தகுதியானவர்கள் என்றும் அவர் கூறினார்.

அதிகரித்து வரும் உற்பத்தித் திறனுக்கு ஏற்ப தனியார் துறை தொழிலாளர்களின் ஊதிய நிலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் உள்ளடக்கியிருக்கும் என்று அன்வார்  தெரிவித்திருந்தார். நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், சட்டரீதியான விளைவுகளைக் கொண்டு மிரட்டுவதற்குப் பதிலாக, உற்பத்தித் திறன் நிலைகளுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்துவது குறித்து தனியார் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வழிகளைத் தனது நிர்வாகம் ஆராயும் என்று கூறினார்.

மே 2025 முதல், கண்ணியமான வாழ்க்கைக்கான ஊதியக் கொள்கையை  அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக, ஆறு ஜிஎல்ஐசிகள் நிரந்தர ஊழியர்களுக்கு RM3,100 குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்துள்ளன. அவை: கசானா நேஷனல் பெர்ஹாட் (Khazanah Nasional Bhd), பெர்மோடலான் நேஷனல் பெர்ஹாட் (Permodalan Nasional Bhd), EPF, ரிட்டயர்மென்ட் ஃபண்ட் இன்க் (Retirement Fund Inc), ஆயுதப்படை நிதிய வாரியம் (Armed Forces Fund Board) மற்றும் லெம்பாகா தாபோங் ஹாஜி (Lembaga Tabung Haji) ஆகியவை ஆகும்.

மொத்தம் 34 ஜிஎல்சி, ஜிஎல்ஐசி RM3,100 அளவிலான கண்ணியமான வாழ்க்கைக்கான ஊதியக் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக அன்வார் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு RM1,700 ஆகும். RM1,700 குறைந்தபட்ச ஊதியத்தை, திறன்மிக்க தொழிலாளர்கள் அல்லது பட்டதாரிகளுக்கான ஆரம்ப ஊதியமாகக் கருதக்கூடாது என்றும் பிரதமர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here