கோலாலம்பூர்:
சபா, தாவாவ் ஜாலான் கலாபாகனில் உள்ள ‘ஃபெல்டா உமாஸ்’ தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில், 37 வயது இந்தோனேசியப் பெண்மணி படுகாயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 28) மாலை 4.55 மணியளவில் குடியிருப்பு வீட்டில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அப்பெண்மணி, அன்றைய தினம் இரவு 8.16 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகத் தவாவ் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி கமிஷனர் ரோஸ்டி மாட் ஜூசோ தெரிவித்துள்ளார்.
“சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலை, கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக, கழுத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது 38 வயது இந்தோனேசியக் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தாவாவ் மாவட்டக் காவல் துறைத் தலைவர், ரோஸ்டி மாட் ஜூசோ தெரிவித்தார்.
விடுமுறை முடிந்து ஊரிலிருந்து திரும்பிய பிறகு தம்பதியரிடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறே இக்கொடூரச் சம்பவத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவ இடத்தில் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அரிவாள் மற்றும் மரத்துண்டு உள்ளிட்ட சான்றுகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 (கொலை வழக்குப் பதிவு) மற்றும் குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) (சட்டவிரோதக் குடியேற்றம்) ஆகியவற்றின் கீழ் தவாவ் மாவட்டக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.























