கோலாலம்பூர்:
ஓடிக்கொண்டிருந்த காரின் கதவைச் சிறுவன் திடீரெனத் திறந்ததால் ஏற்பட்ட விபத்தில், இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் காயமடைந்தனர். அத்தோடு மொத்தம் ஆறு வாகனங்கள் சேதமடைந்தன.
கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஜாலான் துன் ரசாக் சாலையில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு காரின் பின் இருக்கையில் இருந்த சிறுவன் திடீரென கதவைத் திறந்தான் என்று, கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப்பிரிவு தலைவர் உதவி ஆணையர் முகமட் ஜம்சூரி முகமது இசா தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி கதவு எதிர்பாராத விதமாக திறக்கப்பட்டதால், அதன் மீது மோதினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த மற்ற வாகனங்கள் மீது மோதியது.
பின்னால் வந்த மற்றொரு 30 வயது உள்ளூர் நபரின் மோட்டார் சைக்கிளும் இந்த விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் முதல் மோட்டார் சைக்கிள் ஓட்டியின் இடது கையில் முறிவு ஏற்பட்டது. இரண்டாவது மோட்டார் சைக்கிள் ஓட்டி லேசான காயங்களுடன் தப்பினார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், காரில் உள்ள ‘சைல்டு சேஃப்டி லாக்’ (Child Safety Lock) வசதி செயல்பாட்டில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனாலேயே காரின் உட்புறத்திலிருந்து சிறுவனால் எளிதாகக் கதவைத் திறக்க முடிந்தது.
சிறு குழந்தைகளைத் தனியாகப் பின் இருக்கையில் அமர வைக்கும்போது, அவர்கள் தன்னிச்சையாகக் கதவைத் திறப்பதைத் தவிர்க்க ‘சைல்டு லாக்’ வசதியைப் பயன்படுத்துவது கட்டாயம் என்று போக்குவரத்துப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஒரு சிறிய கவனக்குறைவு மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.




















