“தவறான எண்ணிற்கு வந்த மெசேஜ்… பறிபோன வாழ்நாள் சேமிப்பு”: ஆன்லைன் முதலீட்டு மோசடியில் 3.67 லட்சம் ரிங்கிட்டை இழந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்!

கோலாலம்பூர்:

ஆன்லைன் வழி இயங்கி வந்த போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, 70 வயதான ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் RM367,950 பணத்தை இழந்துள்ளதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 31-ஆம் தேதி ‘வியா’ என்ற பெண்மணியிடமிருந்து வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் குறுஞ்செய்தி வந்ததாகக் கோலா திரெங்கானு மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார். தான் நினைத்த நபர் இவர் இல்லை என்றும், தவறுதலாக மெசேஜ் அனுப்பிவிட்டதாகவும் கூறித் தொடக்கத்தில் பேச்சுக்கொடுத்த அந்தப் பெண், நாளடைவில் முதியவருடன் நெருக்கமாகப் பழகியுள்ளார்.

“ஓய்வுக் காலத்திற்குப் பிறகு அதிக இலாபம் ஈட்டலாம் எனக் கூறி அந்தப் பெண் முதியவரை முதலீடு செய்யத் தூண்டியுள்ளார். ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலீடு செய்த முதியவருக்குப் வாக்குறுதி அளித்தபடி இலாபம் வழங்கப்பட்டது. இதை நம்பிய அவர், ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 30 வரை, தனது நிலத்தை விற்ற பணத்திலிருந்து 13 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் 72 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் RM367,950 செலுத்தியுள்ளதாக” அஸ்லி முகமட் நோர் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, முதியவரின் கணக்கில் முதலீடு மற்றும் இலாபமாக 8 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமாகச் சேர்ந்திருப்பதாகவும், அதனை எடுக்க வேண்டுமென்றால் RM80,765 ‘செயலாக்கக் கட்டணம்’ செலுத்த வேண்டும் என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த முதியவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நேற்று காலை போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டம் பிரிவு 420-இன் கீழ் (ஏமாற்றுதல்) போலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here