மணிப்பூரில் மீண்டும் தலைதூக்கிய வன்முறை: 4 பேர் உயிரிழப்பு…

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு வன்முறை வெடித்தது. குக்கி இன மக்களுக்கும் மெய்தி இன மக்களுக்கும் இடையே வெடித்த மோதலில் மணிப்பூர் மாநிலம் முழுவதும் வன்முறை பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

பல்வேறு இடங்களில் போராட்டம்
மத்திய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு மணிப்பூரில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து முதல்வராக பாஜகவை சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங் பதவி ஏற்றார். இருந்த போதிலும் மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இருவேறு இடங்களில் நடைபெற்ற மோதலில் குறைந்தபட்சம் 4 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த உயிர் பலி காரணமாக அங்கு பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

இம்பாலிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கோபம் அடைந்த மக்கள், உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களுடன் முதல்வர் இல்லம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மெய்தி இன மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் போது, கல்வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் இதனால், அங்கு வன்முறை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

போராட்டம்
இந்த வன்முறையில் பலர் காயம் அடைந்த நிலையில், 24 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கி குண்டு காயத்தில் உயிரிழந்தார். அதேபோல, இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கமேன்லோக் பகுதியில் மூன்று கிராம மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மலைகளுக்கு காய்ந்த மரக்கட்டைகளை பொறுக்குவததற்காக சென்ற போது, பழங்குடியினர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த பகுதியில் குக்கி இன பழங்குடியின பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

3 பேர் உயிரிழந்ததால், கோபம் அடைந்த மக்கள் முதல்வர் இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். உயிரிழந்தவர்கள் உடல்களோடு முதல்வர் இல்லம் நோக்கி வந்ததவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கேயே உடல்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் லத்தி சார்ஜ் நடத்தி கலைத்தனர். இத்தகைய சம்பவங்களால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here