துர்கா பூஜை கூட்ட நெரிசல் வழக்கு: பீதியை கிளப்பும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட 2 பேர் கைது…

கொல்கத்தாவில் துர்கா பூஜையின்போது மக்களிடையே பீதியை கிளப்பும் வகையிலான அறிவிப்பை வெளியிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் சோர்பகன் பகுதியில் கடந்த 17-ம் தேதி துர்கா பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, மழை பெய்ததால் துர்கா பூஜை பந்தலில் கூட்டம் அதிகமானது. வெளியில் நின்றவர்களும் பந்தலுக்குள் நுழைந்தனர். ஒரே சமயத்தில் பலர் முண்டியடித்து பந்தலுக்குள் சென்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்பட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், ‘பந்தல் இடிந்து விழப்போகிறது’ என மக்களை பீதியடையச் செய்யும் வகையில் அறிவிப்பு வெளியிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சஞ்சீப் ரஹா, நேற்று நதியா மாவட்டத்தில் பிடிபட்டு பின்னர் கைது செய்யப்பட்டார்; மற்றொருவரான குஷால் மஜும்தார், இன்று கொல்கத்தாவின் கிரிஷ் பார்க் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று கொல்கத்தா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம், கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி மேலும் கூறுகையில், “நெரிசலுக்கு வழிவகுத்த சம்பவங்களை முழுமையாகத் தொகுத்து வருகிறோம். சிசிடிவி காட்சிகளில், இருவர் அறிவிப்புகளைச் செய்வது பதிவாகியுள்ளது. அவர்கள், பந்தல் சரிந்து கொண்டிருப்பதாகக் கூறி, அங்கிருந்தவர்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரிப்பது கேட்கிறது. இந்த அறிவிப்புகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி, அவர்கள் வெளியேறும் வழியை நோக்கி அவசரமாக ஓடத் தூண்டியிருக்கலாம்” என்றார்.

சிறப்பு விசாரணை குழு
கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கூட்ட நெரிசலுக்கான காரணத்தை ஆராயவும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அரசு அமைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here