“உள்ளூர் புதையல் வேட்டை” மூலம் உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிக்கும் மைடின்

ஷாஆலம், அக்.28- மலேசியாவில் உள்நாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிப்பதுடன், நாடு முழுவதும் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், மைடின் முகமது ஹோல்டிங் பெர்ஹாட் (மைடின்) நிறுவனம் சுற்றுலா துறையுடன் பல்வேறு மூலோபாயப் பங்காளிகளுடன் இணைந்து “உள்ளூர் புதையல் வேட்டை” திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா சுபாங் ஜெயாவில் உள்ள MYDIN வணிக வளாகத்தில் நடைபெற்றது. அதன் பின்னர், போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்பதற்காகப் போட்டியாளர்கள் மலாக்காவில் உள்ள MYDIN MITC வணிக வளாகத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கினர்.

இந்தப் போட்டி மூன்று சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்று கடந்த அக்டோபர் 24ஆம் தேதி மைடின் சுபாங் ஜெயாவிலிருந்து மலாக்காவில் உள்ள MYDIN MITC வரையிலும், இரண்டாவது சுற்று வரும் அக்டோபர் 31ஆம் தேதி MYDIN கோப்பெங் RTC-யிலிருந்து பினாங்கில் உள்ள MYDIN புக்கிட் மெர்தாஜாம் வரையிலும், மூன்றாவது சுற்று நவம்பர் 7ஆம் தேதி MYDIN கோல திரெங்கானுவிலிருந்து கிளந்தானில் உள்ள MYDIN துஞ்சோங் வரையிலும் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 அணிகள் பங்கேற்கும். ஒவ்வொரு அணியிலும் 18 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேர் இடம்பெறுவர். இப்போட்டியில் மொத்தம் 45,000 ரிங்கிட் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்ச்சியில் Tourism Malaysia, Tabung Haji Travel and Services, Sunway Lagoon, Lost World of Tambun, Setel, Atome மற்றும் Malaysia Hunt Club உள்ளிட்ட நிறுவனங்கள் மூலோபாயப் பங்காளிகளாக இணைந்துள்ளன.

மைடின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா (டாக்டர்) ஹாஜி அமீர் அலி மைடின் கூறுகையில், இந்த நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் உள்ளூர் சுற்றுலாத் தலங்களை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், மலேசியாவின் தனித்துவமான கலாச்சாரம், பாரம்பரியம்,  சுற்றுலா தளங்களை  பிரபலப்படுத்தும் முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். “உள்ளூர் புதையல் வேட்டை” நிகழ்ச்சியின் மூலம், மலேசியர்கள் அதிக அளவில் உள்ளூர் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று, நமது நாட்டில் காணப்படும் பல்வேறு சிறப்பம்சங்களையும் ஈர்ப்புகளையும் அறிந்துகொள்ள வேண்டும் என நம்புகிறோம்.

சுற்றுலா துறை, எங்களது மூலோபாயப் பங்காளிகளுடனான ஒத்துழைப்பு, உள்நாட்டுச் சுற்றுலாவை மேலும் விரிவாகப் பிரபலப்படுத்துவதற்கும், பங்கேற்பாளர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்குவதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது  என்று அவர் கூறினார். இதற்கிடையில், இந்நிகழ்ச்சியுடன் மைடின் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான மைடினின் பரிவுத் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக  15,000 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தலா  100  ரிங்கிட் மதிப்பிலான 150 உணவுப் பொருள் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, மூன்று பகுதிகளிலும் உள்ள வசதி குறைந்த பி40  குடும்பங்களைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மலாக்காவில் நடைபெறும் முதல் சுற்றின்போது, ஹாங் துவா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து உதவி தேவைப்படும் 50 குடும்பங்கள் அடையாளம் காணப்படவுள்ளன. அதேபோல், இரண்டாவது சுற்றில் புக்கிட் மெர்தாஜாமிலும், மூன்றாவது சுற்றில் கிளந்தானிலும் தலா 50 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படும். உள்நாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சிகளுடன் சமூகப் பொறுப்புணர்வையும் ஒருங்கிணைப்பதன் மூலம், உள்ளூர் சமூகங்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைகிறது. இது சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் சமூக நலனுக்கும் ஒருசேர பங்களிக்கும் மைடின்  நிறுவனத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here