கைது செய்யப்பட்ட 2,097 காவலர்களின் நிலை என்ன? – சட்டத்துறைத் தலைவர்,  போலீஸ்படைத் தலைவரிடம்  நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

2021 முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை கைது செய்யப்பட்ட 2,097 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களில் எத்தனை பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர் அல்லது பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்ற விவரங்களை வெளியிடுமாறு, கெப்பொங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங், காவல்துறைத் தலைவர் காலிட் இஸ்மாயில், சட்டத்துறைத் தலைவர் டுசுகி மொக்தார் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் லிம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில், 2021 முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை கைது செய்யப்பட்டவர்களில் 1,551 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், 64 பேர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாகவும், 482 பேர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 2,097 கைதுகள் என்பது, கடந்த ஐந்து ஆண்டுகள் எட்டு மாத காலப்பகுதியில் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு காவல்துறை அதிகாரி அல்லது பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பதாக லிம் குறிப்பிட்டார். இது காவல்துறையின் நேர்மைக்கு விடுக்கப்பட்ட ஒரு “கடுமையான அடி” என்று அவர் வர்ணித்தார். வழக்கறிஞரான லிம், “காவல்துறையினர் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டியவர்கள், அவர்களே குற்றவாளிகளாக மாறக்கூடாது. காவல்துறையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், பொதுமக்கள் எப்படி அவர்களைத் தொடர்ந்து நம்ப முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இவை மூன்று வகையான குற்றங்கள் மட்டுமே… அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்படாத பிற குற்றங்கள் இதில் அடங்கவில்லை. அனைத்து வகையான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உண்மையான எண்ணிக்கை என்ன?  என்று அவர் வினவினார்.

மேலும், கடந்த பிப்ரவரி 5 அன்று காஜாங், கன்ட்ரி ஹைட்ஸில் (Country Heights), சீன நாட்டவர் குழுவிடமிருந்து சுமார் 200,000 ரிங்கிட் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியைக் கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படும் 12 காவல்துறை அதிகாரிகள் தொடர்பான வழக்கின் விசாரணை ஏன் தாமதமாகிறது என்றும் லிம் கேள்வி எழுப்பினார். புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் உட்பட மொத்தம் 12 காவல்துறை பணியாளர்கள், கூட்டுக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த விசாரணை முறையாக நடைபெறுவதை உறுதிசெய்ய, சம்பந்தப்பட்ட காவலர்கள் அலுவலகப் பணிகளுக்கு (desk duties) மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறைத் தலைவர் காலிட் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் லிம்முக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், இந்தச் சம்பவம் நடந்து எட்டு மாதங்களுக்கு மேலாகியும், வழக்கு இன்னும் விசாரணை நிலையிலேயே இருப்பதாக அமைச்சர் சைஃபுதீன் தெரிவித்தார். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) நடந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு, 23 நாட்களில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட மலேசிய எல்லைக் கட்டுப்பாடு,  பாதுகாப்பு முகமையின் தலைவர் ஷுஹைலி ஜைனின் வழக்கோடு, இதை லிம் ஒப்பிட்டுக் காட்டினார்.

போலீஸ் படைத்தலைவர், அரசுத் தலைமை வழக்கறிஞர்  ஆகியோர், விசாரணைக் கால அளவுகளில் உள்ள இந்த வேறுபாட்டிற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். கடந்த மாதம் இரு காவலர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில், ஷுஹைலி மீது அக்டோபர் 21 அன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here