ராமேஸ்வரி ராஜா, யோகேஸ்வரி
கோலாலம்பூர்:
மூன்று தலைமுறையாக தங்க நகை வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் ஜோயாலுக்காஸ் நகைக்கடை நிறுவனம் மலேசியாவில் 10ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.

இங்கு மஸ்ஜித் இந்தியாவில் இருக்கும் கடையையும் பிரமாண்ட காட்சி மையமாகவும் (ஷோரூம்) உருவாக்கியுள்ளது. இதன் 10 ஆண்டு நிறைவு விழாவுடன் ஷோரூம் திறப்பு விழா மஸ்ஜித் இந்தியாவில் நடைபெற்றது.

ஜோயாலுக்காஸ் மறக்கமுடியாத தருணங்களைக் கொண்டிருக்கிறது. எங்கள் பயணம், வளர்ச்சியில் வாடிக்கையாளர்கள் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார்கள். எனவே இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை எங்களின் புரவலர்கள், நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என ஜோயாலுக்காஸின் நிர்வாக இயக்குநர் ஜோன் பவுல் ஆலுக்காஸ் தெரிவித்தார்.

1987இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு நகைக் கடையாகத் தொடங்கிய எங்கள் பயணம், இப்போது உலகம் முழுவதும் 11 நாடுகளில் 150 ஷோரூம்களைக் கொண்ட ஓர் அனைத்துலக பிராண்டாக வளர்ந்துள்ளோம்.

1956 இல் என் தாத்தா இந்த வர்த்தகத்தை இந்தியாவில் தொடங்கினார். அதன் பின்னர் என் தந்தை ஆலுக்கா ஜோசப் வர்கீஸ், ஆலுக்காஸ் குடும்பத்தினர், எங்களுடன் இடைவிடாமல் பணியாற்றிய எங்கள் ஊழியர்களால் இன்று இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் இதயங்களுக்கு நெருக்கமான ஓர் அற்புதமான பிராண்டை உருவாக்கி யுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை, மதிப்பு, பாரம்பரியத்தின் மரபைக் கட்டியெழுப்பியதன் மூலம், நாங்கள் வளைகுடா நாடுகளான பஹ்ரெய்ன், குவைத், கட்டார், ஓமான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு நாடுகளிலும் இந்தியாவில் காலூன்றியது மட்டுமல்லாமல், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியாவிலும் எங்கள் இருப்பை விரிவுபடுத்தியுள்ளோம்.

இன்றைய எங்களின் சாதனைகள் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், அதேநேரத்தில் இவை எங்களின் பரந்த பார்வையை நோக்கிய மைல்கல்லில் ’உலகத்தை அலங்கரிக்க வேண்டும்’ என்பதையும் நாங்கள் உணர்கிறோம்.



















