குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைகளுக்காக முக்கிய நீதிமன்ற வழக்குகளில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்த முன்னாள் கூட்டரசு நீதிபதி டான்ஸ்ரீ நளினி பத்மநாதனின் பங்களிப்பைத் தொடர்புத் துணையமைச்சர் தியோ நீ சிங் பாராட்டியுள்ளார். ஒரு தாயாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமக்கு, டான்ஸ்ரீ நளினியின் தீர்ப்புகள் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, 2021ஆம் ஆண்டு CTEB & Anor v. தேசியப் பதிவுத் துறை தலைமை இயக்குநர் வழக்கில் அவர் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இவ்வழக்கில், கூட்டரசு அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள ‘தந்தை’ என்ற சொல்லின் விளக்கம், உயிரியல் ரீதியான தந்தை உறவு, பெற்றோரின் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது தொடர்பான அம்சங்கள் ஆராயப்பட்டன.
அதேபோல், 2021ஆம் ஆண்டு CCH & Anor v. பிறப்பு, இறப்பு பதிவுத் துறை தலைமைப் பதிவாளர் வழக்கிலும், மலேசியத் தம்பதியினரால் தத்தெடுக்கப்பட்ட வெளிநாட்டுக் குழந்தையின் குடியுரிமையை நீதிமன்றம் அங்கீகரித்ததைத் தியோ சுட்டிக்காட்டினார்.
அண்மையில் டான்ஸ்ரீ நளினியை நேரில் சந்தித்து, அவரது பங்களிப்புகள் தமக்கு எந்த அளவுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளன என்பதைத் தெரிவித்ததில் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்ட அவர், குடியுரிமையற்ற குழந்தைகளுக்கும் அவர்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கும் டான்ஸ்ரீ நளினியின் கொள்கை உறுதியும் துணிச்சலும் நம்பிக்கையின் ஆதாரமாகத் திகழ்வதாகக் கூறினார்.
கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ, தமது முகநூல் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். நீதியை நிலைநாட்டுவதுடன், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் முயற்சிகளும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக குடியுரிமையற்ற குழந்தைகளின் உரிமைகள், எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் மலேசிய ஊடக மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரி ராஜா














