பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்: விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம் கோடியை விடுவிக்கிறார்…

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் மாநிலத்துக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை குஜராத் செல்கிறார். அங்கு 14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதுடன், பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு 24 ஆவது தவணையாக ரூ. 19,000 கோடியை விடுவிக்க உள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருகிறது

படேல் சிலைக்கு மலர் மரியாதை

இந்தப் பயணத்தில், சர்தார் வல்லபபாய் படேலின் 151 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரும் அக். 31 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சிலையான படேலின் சிலைக்கு மலர் மரியாதைச் செலுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், அகமதாபாத் நகரத்தில், 6 கி.மீ. மற்றும் 3.3 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டு வெவ்வேறு மெட்ரோ ரெயிலின் அடுத்த கட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த செப்டம்பர் மாதம் குஜராத் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு ரூ.35,000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் இரண்டு நாள் குஜராத் பயணத்தில், மெட்ரோ ரெயில் விரிவாக்கம், விவசாயிகளுக்கான நிதியுதவி, கால்நடை இன மேம்பாடு, சுற்றுலா வசதிகள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்கள் எனப் பல்வேறு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here