மலாக்கா மாநிலத் தேர்தல்: 28 தொகுதிகளில் 76 வேட்பாளர்கள் களத்தில்!

(ரெ.மாலினி)

மலாக்கா, அக். 31 – மெலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தல் (PRN16) இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 28 வேட்புமனுத் தாக்கல் மையங்களில் காலை 9 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன.

இதுவரை பக்கத்தான் ஹராப்பான் (PH), பாரிசான் நேஷனல் (BN), பெரிக்காத்தான் நேஷனல் (PN), மலேசிய பிரிபூமி பெர்சத்து கட்சி (Bersatu) மற்றும் பார்ட்டி பெர்சாமா மலேசியா (Bersama) ஆகிய கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தபட்சம் 76 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

எனினும், காலை 10 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த பின்னரே இறுதியாகப் போட்டியிடத் தகுதி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை உறுதியாகத் தெரியவரும். சுயேச்சை வேட்பாளர்களின் வருகை மற்றும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக தொகுதிகளின் போட்டி நிலவரத்திலும் மாற்றம் ஏற்படலாம்.

ஆரம்பகட்ட கணிப்புகளின்படி, இத்தேர்தலில் 13 தொகுதிகளில் நேரடிப் போட்டியும், 11 தொகுதிகளில் மும்முனைப் போட்டியும், நான்கு தொகுதிகளில் நான்குமுனைப் போட்டியும் நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

PH 24 தொகுதிகளில் போட்டி

பக்கத்தான் ஹராப்பான் (PH) மொத்தம் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் PKR கட்சிக்கு 10 தொகுதிகளும், DAP மற்றும் அமானா கட்சிகளுக்கு தலா ஏழு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இக்கூட்டணியில் 13 புதிய முகங்களும் இடம்பெற்றுள்ளனர்.

BN 23 தொகுதிகளில் களம்

பாரிசான் நேஷனல் (BN) மொத்தம் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் அம்னோவிலிருந்து 18 பேரும், MIC சார்பில் ஒருவரும், MCA சார்பில் நான்கு பேரும் களமிறங்குகின்றனர்.

சமீபத்திய தொகுதிப் பங்கீட்டு மாற்றத்தின்படி, DAP வலுவாகக் கருதப்படும் கோத்தா லக்சாமானா மற்றும் பண்டார் ஹிலிர் தொகுதிகளில் MCA போட்டியிடுகிறது. ஏற்கெனவே தக்கவைத்துள்ள கிளேபாங் மற்றும் மாசாப் ஜெயா தொகுதிகளிலும் MCA போட்டியிடுகிறது.

PN, Bersatu மற்றும் Bersama கட்சிகளின் போட்டி

பெரிக்காத்தான் நேஷனல் (PN) இதுவரை ஐந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் பாஸ் கட்சியிலிருந்து இருவரும், பார்ட்டி வாசான் நெகாராவிலிருந்து இருவரும், கெராக்கான் கட்சியிலிருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், பெர்சத்து கட்சி தனது சொந்தச் சின்னத்தில் எட்டு வேட்பாளர்களைக் களமிறக்குகிறது.

இதில் கிளேபாங், காடெக், ஆயர் குரோ மற்றும் பாங்காலான் பத்து ஆகிய நான்கு தொகுதிகளில் PH வேட்பாளர்களுடன் பெர்சத்து வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். முன்னதாக PH Plus கூட்டணி அடிப்படையில் இரு தரப்பும் இணைந்து செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த நிலை கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், NGO அமைப்புகள் மற்றும் தொழில்முறைத் துறைகளைச் சேர்ந்த புதிய முகங்களைக் கொண்டு பார்ட்டி பெர்சாமா மலேசியா (Bersama) 16 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இம்மாநிலத் தேர்தலில் மொத்தம் 687,697 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 338,848 பேர் ஆண்கள், 348,849 பேர் பெண்கள் ஆவர்.

30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களாக உள்ளனர். இப்பிரிவில் 148,222 பேர் அல்லது 21.99 விழுக்காட்டினர் இடம்பெற்றுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 143,607 பேர் அல்லது 20.81 விழுக்காட்டினராக உள்ளனர்.

நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் கோத்தா மெலாக்கா தொகுதியில் அதிகபட்சமாக 168,297 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தங்கா பத்து (124,407), ஹாங் துவா ஜெயா (124,173), ஜாசின் (101,277), அலோர் காஜா (97,336) மற்றும் மஸ்ஜித் தானா (72,207) ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

வாக்குப்பதிவைச் சீராக நடத்துவதற்காக மாநிலம் முழுவதும் 271 வாக்குச்சாவடிகளும், 1,263 வாக்குப்பதிவு மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினருக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு வசதிகளும் இதில் அடங்கும்.

வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 14 நாட்கள் தேர்தல் பிரசாரம் நடைபெறவுள்ளது. நவம்பர் 13ஆம் தேதி இரவு 11.59 மணியுடன் பிரசாரம் நிறைவடையும். நவம்பர் 10ஆம் தேதி முன்கூட்டிய வாக்குப்பதிவும், நவம்பர் 14ஆம் தேதி பொதுவாக்குப்பதிவும் நடைபெற உள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மெலாக்கா மாநிலத் தேர்தலில் BN 28 சட்டமன்றத் தொகுதிகளில் 21 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. PH ஐந்து இடங்களையும், PN இரண்டு இடங்களையும் பெற்றிருந்தன.

இம்முறை PH தான் போட்டியிடும் 24 தொகுதிகளில் 18 இடங்களைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் கடந்த தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய BN-க்கு சவால் விடுக்கும் நோக்கில் PH களமிறங்கியுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர் ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் உண்மையான போட்டி நிலவரம் தெளிவாகும். அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்கள் நடைபெறும் தேர்தல் பிரசாரங்கள், அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக அமையும்.\

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here