கடை இட ஒதுக்கீடு தொடர்பான தகராறில் கலவரத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

கோலாலம்பூரில் உள்ள சுங்கை பீசியில், டேசா துன் ரசாக் (Desa Tun Razak) பகுதியில், கடை இட ஒதுக்கீடு தொடர்பான தகராறு காரணமாக, உணவகம் ஒன்றின் வெளியே கலவரத்தில் ஈடுபட்ட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் ஃபடில் மர்சுஸ் (Fadil Marsus) வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் டேசா துன் ரசாக்கில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதில் எட்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், கடை இட ஒதுக்கீடு குறித்த தவறான புரிதலே இந்த மோதலுக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 16 முதல் 44 வயதுக்குட்பட்ட ஒன்பது சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் இருவர் முக்கிய சந்தேக நபர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீது ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் சில பொருட்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர் என்று அவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பாக, குற்றவியல் சட்டத்தின் 148ஆவது பிரிவின் கீழ், ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here