ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு பொது சுகாதார வாகனங்களுக்கு 1,176 ஓட்டுநர்கள் பற்றாக்குறையை சுகாதார அமைச்சகம் எதிர்கொண்டுள்ளது. இதனால், தற்போதுள்ள ஓட்டுநர்கள் அதிக பணிச்சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 2024ஆம் ஆண்டில் பொதுச் சேவைகள் ஆணையம் ஆள்சேர்ப்பை ஒத்திவைத்ததன் காரணமாக, இந்த ஆள் பற்றாக்குறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் சேவை ஊதிய முறைமையின் கீழ் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஓட்டுநர்களைப் பணியமர்த்தும் பணி ஒத்திவைக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது, ஓட்டுநர்கள் அதிகாரப்பூர்வமாகப் பொதுச் சேவை உதவியாளர்கள் என அழைக்கப்படுவதோடு, ஒரு திறமையான சேவைப் பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அது கூறியுள்ளது. இந்த மாற்றம், ஓட்டுநர் பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குறிப்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாகச் செயல்படுவதற்கு உண்மையிலேயே தகுதியானவர்கள், திறமையானவர்கள் என்பதை உறுதிப்படுத்த, அவர்களின் தகுதிகளை இன்னும் கூர்ந்து கவனிக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த புதிய திட்டம், பணி வரம்புகளை விரிவுபடுத்துவதையும், பல திறன்களை வளர்த்துக்கொள்வதையும், ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்யும் திறனை மேம்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், நாடு முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை படிப்படியாக நிரப்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் மீது பொதுச் சேவை ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விண்ணப்பதாரர்களுக்கான ஓட்டுநர் திறன் தேர்வுகள் அக்டோபர் 27ஆம் தேதி நிறைவடைந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பர் 30 நிலவரப்படி, சுகாதார அமைச்சகத்தில் மொத்தம் 8,863 ஓட்டுநர் பணியிடங்கள் இருந்தன. அவற்றில் 7,687 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.














