அவர் இல்லை… ஆனால், அவரது அன்பு இன்னும் இருக்கிறது! மனதை நெகிழ வைக்கும் Air Selangor-இன் தீபாவளிச் சிறப்புக் குறும்படம் ‘Sinar Rani’

வீடு முழுவதும் தீபங்களின் ஒளி நிறைந்திருந்தாலும், மனம் மட்டும் இருளில் மூழ்கியிருந்தால் அந்தத் தீபாவளியை எப்படிக் கொண்டாட முடியும்?

நம்முடன் சிரித்து, பேசி, வாழ்க்கையின் ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தையும் பகிர்ந்துகொண்ட அன்புக்குரிய ஒருவர் இன்று நம்முடன் இல்லையென்றால், பண்டிகை நாளில்கூட அவரது நினைவுகள் நம் கண்களைக் கண்ணீரால் நிரப்பிவிடும்.

சுற்றிலும் கொண்டாட்டங்கள் களைகட்டினாலும், மனதிற்குள் மட்டும் ஒரு வெறுமை நிலைத்திருக்கும். அந்த வலியை வார்த்தைகளால் விவரிப்பது அவ்வளவு எளிதல்ல.

அப்படியொரு தனிமையில்தான் ராணியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்…

அன்புக் கணவர் கிருஷ்ணன் மறைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அவருடன் வாழ்ந்த இனிய நினைவுகளிலிருந்து ராணியால் இன்னும் மீண்டுவர முடியவில்லை.

காலங்கள் மாறினாலும், நாட்கள் நகர்ந்தாலும், கணவரின் நினைவுகளோடு அவரது மனம் மட்டும் கடந்த காலத்திலேயே நின்றுவிட்டது.

இந்த ஆண்டுத் தீபாவளியைத் தனியாகக் கழிக்க முடிவெடுக்கிறார் ராணி. கணவரின் உடைமைகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒழுங்குபடுத்தும்போது, அவற்றுடன் பின்னிப் பிணைந்திருக்கும் நினைவுகள் அவரை மீண்டும் மீண்டும் கண்கலங்க வைக்கின்றன.

ஆனால், எதிர்பாராத ஒரு சந்திப்பு அவரது வாழ்க்கையின் திசையையே மாற்றத் தொடங்குகிறது!

தெருவில் சுற்றித் திரிந்த ஒரு நாய், ராணியின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நுழைகிறது. அந்தச் சந்திப்பு அவரை ஓர் விலங்குகள் பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறது.    அங்கு அன்புக்காக ஏங்கும் விலங்குகளைப் பராமரிக்கும் தன்னார்வப் பணியில் ஈடுபடத் தொடங்குகிறார் ராணி.

மற்ற உயிர்களுக்காகச் சிறிய உதவிகளைச் செய்யும்போது, தனது மனதிற்குள்ளும் ஒரு மாற்றம் நிகழ்வதை அவர் உணர்கிறார்.

புதிய மனிதர்களின் அறிமுகம், பிறருக்கு உதவும் மகிழ்ச்சி, அன்புக்காக ஏங்கும் உயிர்களின் நெருக்கம் என ராணியின் தனிமையான உலகில் மெல்ல மெல்ல புதிய வெளிச்சம் பரவத் தொடங்குகிறது.

அந்த நாய்க்கு அவர் வைத்த பெயர் ‘செல்லம்’!

ராணியின் வீட்டில் மட்டுமல்ல, அவரது இதயத்திலும் செல்லம் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.

நீண்ட நாட்களாகத் தனிமையில் தவித்த ராணியின் அன்றாட வாழ்க்கையில், செல்லத்தின் வருகை ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால், ராணி சற்றும் எதிர்பாராத இன்னொரு சம்பவமும் நிகழ்கிறது.

செல்லத்தின் காரணமாக, மறைந்த கணவர் கிருஷ்ணனின் பழைய கைத்தொலைபேசி மீண்டும் ராணியின் கைகளுக்குக் கிடைக்கிறது.

அந்தத் தொலைபேசிக்குள் ராணிக்காக ஒரு செய்தி காத்திருக்கிறது…

நம்மைவிட்டுப் பிரிந்த அன்புக்குரிய ஒருவரின் குரலை மீண்டும் கேட்கும் வாய்ப்பு கிடைத்தால், அந்த நொடி எப்படி இருக்கும்?

சொல்லப்படாமல் போன வார்த்தைகள், எதிர்பாராத ஒரு நாளில் நம்மை வந்தடைந்தால், நம் இதயம் என்ன உணரும்?

கிருஷ்ணன் விட்டுச் சென்ற அந்தச் செய்தி என்ன?

அது ராணியின் மனதில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது?

தனிமையில் தீபாவளியைக் கழிக்க நினைத்த ராணியின் வாழ்க்கையில் மீண்டும் ஒளி பிறக்குமா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை உணர்வுபூர்வமாகச் சொல்கிறது Air Selangor தயாரித்துள்ள எட்டு நிமிடத் தீபாவளிச் சிறப்புக் குறும்படமான ‘Sinar Rani’

இருளைக் கடந்தும் வாழ்க்கையில் ஒளி பிறக்கலாம்!

ராணியின் கதை நம்மைச் சுற்றியுள்ள பலரது வாழ்க்கையையும் நினைவூட்டக்கூடும்.

வாழ்க்கைத் துணையை இழந்து தனிமையில் வாழும் ஒரு தாய்… அன்புக்குரியவரின் பிரிவைத் தாங்கிக்கொண்டு வாழும் ஒரு தந்தை… வெளியில் புன்னகைத்தாலும் உள்ளுக்குள் சொல்ல முடியாத துயரத்தைச் சுமக்கும் ஒரு நண்பர்…

இந்தத் தீபாவளியில் அவர்களுக்காகவும் சிறிது நேரம் ஒதுக்குவோம்.

ஓர் அன்பான தொலைபேசி அழைப்பு, நேரில் சந்தித்துப் பேசும் சில நிமிடங்கள் அல்லது ஒன்றாக அமர்ந்து பகிர்ந்துகொள்ளும் ஓர் உணவு… நமக்குச் சிறியதாகத் தோன்றும் இத்தகைய தருணங்கள், தனிமையில் இருக்கும் ஒருவருக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையலாம்.

வாழ்க்கையின் மிக இருண்ட தருணங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், அங்கேயே நமது வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. அன்பை மீண்டும் உணரவும், புதிய உறவுகளை உருவாக்கவும், வாழ்க்கையை முழுமையாக வாழவும் நமக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனெனில், எத்தனை ஆழமான இருளாக இருந்தாலும், ஒரு துளி அன்பு மீண்டும் ஒளியேற்றக்கூடும்!

ராணியின் மனதை நெகிழ வைக்கும் பயணத்தைக் காணுங்கள்!

கீழே உள்ள Linkஐ  CLICK செய்து, Air Selangor-இன் *‘Sinar Rani’* முழுக் குறும்படத்தையும் கண்டுகளியுங்கள்.

https://hydrohub.airselangor.com/video/air-selangor-deepavali-2026-sinar-rani/

இந்தத் தீபாவளியில், உங்கள் அன்புக்குரிய ஒருவருடனும் இந்த நெகிழ்ச்சியான கதையைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here