“இந்திய சினிமா தலைநிமிர்ந்து நிற்கிறது!” – அட்லீயை வியக்க வைத்த ‘ராமாயணா’…

சென்னை, ராமாயணா வெறும் திரைப்படம் அல்ல; அது ஓர் அற்புதமான அனுபவம். படத்தின் கற்பனைத் திறனும், அதைத் திரையில் செயல்படுத்திய விதமும் வியக்க வைக்கின்றன. உலக அரங்கில் இந்திய சினிமா பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு. என அட்லீ பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா: பாகம் 1’. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர். மேலும், ரவி துபே, ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், ஷோபனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். பிரமாண்டமான காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்லீ பாராட்டு
இந்நிலையில், ‘ராமாயணா’ திரைப்படத்தைப் பார்த்த இயக்குநர் அட்லீ, படக்குழுவினரைப் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ராமாயணா வெறும் திரைப்படம் அல்ல; அது ஓர் அற்புதமான அனுபவம். படத்தின் கற்பனைத் திறனும், அதைத் திரையில் செயல்படுத்திய விதமும் வியக்க வைக்கின்றன. உலக அரங்கில் இந்திய சினிமா பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப்படம் சிறந்த எடுத்துக்காட்டு. நமது கலாசாரம் மற்றும் உணர்வுகளுடன் ஆழமாக வேரூன்றியிருக்கும் இப்படம், தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படும் படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தை எனது மகன், மகளுடன் பார்த்து, குடும்பத்தினருடன் கொண்டாடி, எனது தனிப்பட்ட திரைப்படச் சேகரிப்பில் பாதுகாத்து வைக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினருக்கும் பாராட்டு
மேலும், ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், ஷோபனா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பையும் அட்லீ பாராட்டியுள்ளார். ஏ.ஆர். ரகுமான், ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோரின் இசை மாயாஜாலமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். படத்தின் பிரமாண்டமான காட்சிகளுக்குப் பின்னால் உழைத்த டி.என்.இ.ஜி. (DNEG) நிறுவனத்தினர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் தொலைநோக்குப் பார்வையையும், இயக்குநர் நிதேஷ் திவாரியின் கடின உழைப்பு மற்றும் படைப்பாற்றலையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். திரைக்கதையைத் தழுவி எழுதிய ஸ்ரீதர் ராகவனுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் கதைகள், கலாசாரம், உணர்வுகள் ஆகியவற்றை உலகமே கொண்டாடும் வகையில் பிரமாண்டமாகப் படைத்துள்ளனர். இது இந்தியத் திரைப்படம்; உலகம் இதைக் கொண்டாடப் போகிறது. படத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்தேன். இந்தத் திரைப்பட அனுபவம் என் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும். இரண்டாம் பாகத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றும் அட்லீ தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here