ஜகா’ போஸ்டர் சர்ச்சை – மன்னிப்பு கேட்ட இயக்குனர்

கடவுள் சொன்னா மனுஷன் கேட்பான்?

பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்த ‘ஆடுகளம்’ முருகதாஸ், கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஜகா’. இதை ஆர்.விஜயமுருகன் இயக்கி உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் சிவன் போன்று வேடமணிந்து முருகதாஸ் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசம் செய்வது போன்று இருந்தது. இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும், இதை நீக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஹிந்து இயக்கங்கள் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் ஆர்.விஜயமுருகன் வெளியிட்ட அறிக்கை : ஜகா பர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரின் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. எங்கள் நிறுவனத்தின் பெயரே ஓம் டாக்கீஸ். பாபநாசம் சிவன் கோயிலில் பூஜை போட்டுவிட்டு தான் படப்பிடிப்பை தொடங்கினோம்.
அப்படி இருக்கும்போது சிவபெருமானை அவமதிப்போமா. கோவிட் 19 விழிப்புணர்வு நோக்கத்தில் வைக்கப்பட்ட காட்சி தான் அது. கொரோனா வழிகாட்டு முறைகளை மீறக்கூடாது என கடவுளே சொல்வது போன்று தான் அந்த போஸ்டர்.

மனிதர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட கடவுள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டது.

படத்தில் எந்த இடத்திலும் கடவுள் அனுமதிக்கப்படவில்லை. அதுபோன்ற எண்ணம் ஒருபோதும் எங்களுக்கு ஏற்படாது. மலிவான விளம்பரம் போடும் விருப்பம் எங்கள் குழுவினருக்கு துளியும் இல்லை.
இருப்பினும் எந்தவித உள்நோக்கமும் இல்லாது செயல்பட்ட எங்களின் இத்தகைய செயல் பலரின் மனதை புண்பட்டது அறிந்து வருந்துகிறேன்.
அதற்காக மன்னிப்பு கோருவதோடு கொரோனா இல்லாத உலகம் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here