நஜிப்பின் நிபந்தனை மன்னிப்பு குறித்து எந்தக் குழப்பமும் இல்லை – இஸ்தானா நெகாரா

முன்னாள் பிரதமரின் வீட்டுக் காவலை மறுஆய்வு நிலுவையில் உள்ள நிலையில் ஒத்திவைக்க வேண்டும் என்ற தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் (AGC) பரிந்துரையைத் தொடர்ந்து, நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். நிபந்தனை மன்னிப்பு ஆணை தெளிவானது, வெளிப்படையானது, சந்தேகத்திற்கு இடமற்றது என்றும், இது முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்ட வேறு எந்த வழக்குகளுடனும் தொடர்புடையது அல்ல என்றும் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியதாக அரண்மனை அறிக்கை தெரிவித்தது.

அதன் விளக்கத்தில் குழப்பத்திற்கு இடமிருக்கக் கூடாது. ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவின் அமலாக்கத்தில் நீடித்த நிச்சயமற்ற தன்மையும் இருக்கக் கூடாது.நிபந்தனை மன்னிப்பு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து முன்வைக்கப்படும் எந்தவொரு வாதமும் மாட்சிமை பொருந்திய மாமன்னரின் ஆணையை மீறுவதாக அமையும் என்று அரண்மனை கூறியது.

நிபந்தனை மன்னிப்பு மற்றும் விடுவிப்பு உத்தரவு ஆகியவை மறுஆய்வு செய்யப்படும் வரை நஜிப்பின் வீட்டுக் காவலை ஒத்திவைக்க வேண்டும் என்று அரசுத் தலைமை வழக்கறிஞர் நேற்று பரிந்துரைத்தார். இந்த இரண்டு விவகாரங்களும் சிக்கலான சட்டக் கேள்விகளை உள்ளடக்கியுள்ளதாகவும், அவை அரச மன்னிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here