ஜோகூர் பாருவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் திடீர் வெள்ளப் பாதிப்புகளுக்குத் தீர்வு காணும் வகையில், 3 கோடியே 53 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 20 வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தெரிவித்தார்.வடகிழக்குப் பருவமழைக் காலம் நெருங்கிவரும் நிலையில், வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான பணிகளைச் சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத் துறைகளும் விரைவுபடுத்த வேண்டும் என்றும், திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகள் நிறைவுபெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜோகூர் பாருவில் அண்மையில் பெய்த கனமழையால் கம்போங் முகமட் அமின், கம்போங் பாசீர், ஜாலான் யாஹ்யா அவால், சுல்தானா அமினா மருத்துவமனை உள்ளிட்ட 12 முக்கியப் பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக அவர் கூறினார்.இரண்டு மணி நேரத்திற்குள் 120 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியிருப்பது, நகரின் வெள்ளத் தடுப்பு மற்றும் வடிகால் கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சுங்கை சாட் நீரேற்று நிலையம் மற்றும் கம்போங் முகமட் அமினில் அமைக்கப்பட்டுவரும் வெள்ளநீர் தேக்கக் குளத் திட்டப் பகுதிகளை மந்திரி பெசார் நேரில் பார்வையிட்டார்.ஜோகூர் பாரு மாநகர் மன்றம் (எம்.பி.ஜே.பி.), ஜோகூர் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (ஜே.பி.எஸ்.), பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்.) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆறு ஆற்றுப் படுகைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சாலைப் பகுதிகளை உள்ளடக்கிய வகையில் 20 வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வடிகால் அமைப்புகளை மேம்படுத்துதல், புதிய வெள்ளநீர் தேக்கக் குளங்களை அமைத்தல், கூடுதல் நீரேற்று இயந்திரங்களை நிறுவுதல், நீர்க்கதவுகளைப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் இத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக, சுங்கை சாட் ஆற்றுப் படுகையில் தற்போதுள்ள நீர்த்தேக்கக் குளங்களை ஆழப்படுத்துவதுடன், மேலும் இரண்டு புதிய நீர்த்தேக்கக் குளங்கள் அமைக்கப்படவுள்ளன.

கம்போங் பாசீர் மற்றும் சுங்கை ஸ்கூடாய் பகுதிகளில் வடிகால் அமைப்புகளை மேம்படுத்தி, வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நீரேற்று இயந்திரங்களின் செயல்பாடுகளும் வலுப்படுத்தப்படவுள்ளன.சுல்தானா அமினா மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்காக நீரேற்று இயந்திரங்களின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், ஜாலான் மஹ்மூடியா சாலையின் உயரத்தையும் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.அதேபோன்று, ஜாலான் ஆயர் மோலேக் மற்றும் ஜாலான் யாஹ்யா அவால் பகுதிகளில் வெள்ளநீர் தேக்க அமைப்புகளை உருவாக்குவதுடன், பிரதான வடிகால்களும் மேம்படுத்தப்படவுள்ளன.
சுங்கை செங்குவாங் மற்றும் ஜாலான் இஸ்மாயில் சுல்தான் பகுதிகளில் வடிகால்கள், நீர்வழிக் குழாய்கள் மற்றும் நீர்க்கதவுகளை மேம்படுத்தும் பணிகளும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.தாமான் மெர்டேக்கா, கம்போங் பாசீர், ஜாலான் இஸ்மாயில் சுல்தான் மற்றும்கம்போங் முகமட் அமின் ஆகிய பகுதிகளில் நடைபெறும் வெள்ளத் தடுப்புப் பணிகளை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவுசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் தெரிவித்தார்.ஏனைய திட்டங்கள் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கனமழை பெய்யும் ஒவ்வொரு முறையும் ஜோகூர் மக்கள் தங்களது குடும்பத்தினர், வீடுகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு குறித்து அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலையைத் தாம் நன்கு உணர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.”ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும்போது, தங்களது குடும்பத்தினருக்கும் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் என்ன நேருமோ என்ற கவலை ஜோகூர் மக்களிடையே ஏற்படுகிறது. அவர்களின் அச்சத்தையும் சிரமங்களையும் நான் நன்கு உணர்கிறேன்.
“அதனால்தான் வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நீண்டகாலமாக வெள்ளப் பிரச்சினையை எதிர்நோக்கிவரும் மக்களுக்கு இத்திட்டங்கள் நிரந்தரமான நிம்மதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்,” என்று அவர் தெரிவித்தார்.Aவெள்ளப் பாதிப்புகளைத் தணிப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் சுமுகமாக நிறைவேற வேண்டும் என்றும், ஜோகூர் மாநிலமும் அதன் மக்களும் இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அனைவரும் பிரார்த்திக்குமாறு மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி கேட்டுக்கொண்டார்.
கோகி கருணாநிதி















