போலீஸ் அதிகாரியின் வலது கை மணிக்கட்டு துண்டிப்பு! குற்றவாளி மீது கடும் நடவடிக்கை – பிரதமர் அன்வார் உத்தரவு!

கோலாலம்பூர், 

கெப்போங்கில் வெளிநாட்டவர் ஒருவர் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவரின் வலது கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்கு மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் கொடூரத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அமலாக்க அதிகாரிகளுக்கு எதிரான வன்முறைகளை எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றிக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அன்வார், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதுடன் கடமையிலுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் உயிர் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வதும் அவசியம் என வலியுறுத்தினார். மேலும், தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரி விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரி கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here