போர்ட்டிக்சன்,
நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில் நடைபெற்ற 125ZR மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற 28 வயது இளைஞர் ஒருவர், இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெட்டாலிங் ஜெயாவைச் சேர்ந்த குறித்த இளைஞர், 125ZR Members Gathering 2.0 நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் ஜாலான் பந்தாய் சாலையின் 5.7ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி எதிர்திசைப் பாதைக்குள் நுழைந்ததாகவும், அப்போது எதிரே வந்த Perodua Axia காருடன் மோதியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த 29 வயது பெண்ணுக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக போர்ட் டிக்சன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் அஹ்மத் அஃபிக் முகமது அட்னான் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக 1987ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)ஆவது பிரிவின் கீழ் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





















