2022 தேசிய தின கொண்டாட்டத்தை திறம்பட நடத்தியதற்காக அரசு, பங்கேற்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு பேரரசர் வாழ்த்து

கோலாலம்பூர், செப்டம்பர் 3 :

இங்குள்ள டத்தாரான் மெர்டேக்காவில் ஆகஸ்ட் 31-ம் தேதி நடந்த 65-வது தேசிய தினக் கொண்டாட்டத்தினை மிகச்சிறப்பாக ஒழுங்கமைத்து சிறப்பித்த்தற்காக அரசாங்கம், பங்கேற்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இஸ்தானா நெகாரா அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டாளர், டத்தோஸ்ரீ அஹ்மட் ஃபாடில் ஷம்சுதீன் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 2022 தேசிய தின நிகழ்வை வெற்றியடையச் செய்ததற்காக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் டான்ஸ்ரீ அன்னுார் மூசா ஆகியோருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் மக்களால் வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமை, தேசபக்தி மற்றும் தேசத்தின் மீதான அன்பு மற்றும் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட இதே போன்ற நிகழ்வுகள் தன்னை ஆச்சரியப்படுத்துவதாகவும் கூறி அல்-சுல்தான் அப்துல்லா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“விழாவில் பங்கேற்ற அனைத்து அணிகளின் உறுப்பினர்களின் செயற்பாடுகளால் அதாவது அவர்களால் காட்டப்படும் தேசிய உணர்வு மற்றும் நாட்டின் மீதான அன்பு, குறிப்பாக பல்வேறு இனங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட வேண்டும், மேலும் அவர்களது இந்த ஒற்றுமை தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும்” என்று பேரரசர் தெரிவித்ததாக, அஹ்மட் ஃபாடில் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேசிய தின விழாவைக் காணச் சென்ற மக்களுக்கு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் பேரரசர் தெரிவித்தார்.

தேசிய தினத்தன்று 50,000 பேர் என்ற இலக்கை தாண்டி கூட்டம் இரு மடங்காக அலைமோதியது குறிப்பிடத்தக்கது. அதுபோல ‘ செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் மலேசியா தினக் கொண்டாட்டத்திலும் இந்த மக்கள் திரள் ஒன்றுகூடி தமது ஒற்றுமை மற்றும் தேசிய உணர்வை பிரதிபலிப்பார்கள் என்றும் பேரரசர் நம்பிக்கை தெரிவித்தார்” என்று அஹ்மட் ஃபாடில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here