கோலாலம்பூர்,
பேராக் மாநிலத்தின் சுங்காய் அருகே இன்று நிகழ்ந்த போலீஸ் வேன் விபத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய பாதையில், தாப்பா அருகே 352ஆவது கிலோமீட்டரில் பயணித்துக்கொண்டிருந்த மலேசிய அரச காவல்துறைக்குச் சொந்தமான வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்புத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முகமது ஷாருல் அலிஃப் யாக்கோப் என்ற காவலர் உயிரிழந்தார். மேலும், வேனில் பயணித்த 10 காவலர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கும் காயமடைந்த காவலர்களுக்கும் உடனடி உதவிகளை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதற்காகத் தனது அரசியல் செயலாளர் காமில் முனிமை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் காவலர்களுக்கும் உதவித்தொகைகளை வழங்குமாறு பணித்துள்ளதாக பிரதமர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த காவலரின் குடும்பத்தினர் இந்தத் துயரத்தைத் தாங்கும் மனவலிமையைப் பெறவும், காயமடைந்த காவலர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.























