17 வயதில் இஸ்லாத்திற்கு மாறியது செல்லுபடியாகாது; உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

ஜார்ஜ் டவுன்:

தான் 17 வயதாக இருக்கும்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியதை செல்லுபடியாகாது எனவும், அதனை ரத்துச் செய்யக் கோரியும் சபா பெண் ஒருவர் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு பினாங்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

தற்போது 22 வயதாகும் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த ஹெர்லின் ஜாம்லின் என்ற பெண், 2020 ஆம் ஆண்டு தனது இஸ்லாமிய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காகவே இஸ்லாத்திற்கு மாறினார்.

ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அவர்களது உறவு முறிந்தது, காதலனே இல்லை என்று ஆகிய பின்னர், தான் மதம் மாறியது எவ்வாறு செல்லும் எனவும், மதம் மாறியபோது தனக்கு 17 வயது ஆகையால் தனது மதமாற்றத்தை ரத்து செய்யுமாறும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கில் பெற்றோரின் ஒப்புதல் இல்லாததால், ஆரம்பத்திலிருந்தே அவரது மதமாற்றம் செல்லுபடியாகாது என்று பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி குவே செவ் சூன் தீர்ப்பளித்தார்.

இதற்கு இந்திரா காந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி மேற்கோள்காட்டினார்.

மேலும் ஹெர்லினின் இஸ்லாமிய மதமாற்றச் சான்றிதழ் மற்றும் பிற மதமாற்றம் தொடர்புடைய ஆவணங்களை ரத்து செய்யுமாறு, மாநில இஸ்லாமிய மன்றம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுக்கு நீதிபதி குவே செவ் சூன் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here