இந்தியச் சமூக மேம்பாட்டுக்கு 35 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு -கல்வி, இளைஞர் திறன் பயிற்சி, தொழில்முனைவோர் வளர்ச்சிக்கு வரவுசெலவுத் திட்டம் 2027 முக்கியத்துவம் – தெக்குன், அமனா இக்தியார் நிதியுதவியால் சிறு வணிகர்கள் மகிழ்ச்சி

மலேசிய இந்தியச் சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சி, கல்வி, தொழில்முனைவோர் மேம்பாடு, நலன் ஆகியவற்றுக்கு வரவுசெலவுத் திட்டம் 2027-இல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 35 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு (MITRA) வழங்கப்படும் நிதி 10 கோடி ரிங்கிட்டிலிருந்து 15 கோடி ரிங்கிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதில் இந்நிதி கவனம் செலுத்தும்.

தொழில்துறை நவீனத் தொழில்நுட்பம், விமானப் பராமரிப்பு, வாகனத் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் துறைகளில் பயிற்சி வழங்குவதன் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தகுதியை உயர்த்துவது இதன் நோக்கமாகும். இதனுடன், வெற்றி மடானி (VETRI MADANI) திட்டத்துக்கு 2 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், பட்டதாரிகளுக்குத் தொழில்துறையின் தேவைக்கேற்ற திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோருக்கு உதவ தெக்குன் நேஷனல் (TEKUN Nasional), அமனா இக்தியார் மலேசியா (AIM) ஆகிய அமைப்புகள் மூலம் மொத்தம் 15 கோடி ரிங்கிட் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதில் தெக்குன் நேஷனலின் SPUMI Goes Big திட்டத்தின் கீழ் 10 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. அமனா இக்தியார் மலேசியா மூலம் இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு சிறுகடன் வழங்குவதற்காக 5 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவித் திட்டங்கள் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்துக்கு எவ்வாறு துணையாக இருக்கின்றன என்பதைப் பயனாளிகளின் அனுபவங்களும் எடுத்துக்காட்டுகின்றன.

அங்காடிக் கடை வியாபாரி மணிமாறன் இயமலை (தெக்குன் பயனர்)

எம்.கே.எஸ் மார்ட் அங்காடியின் உரிமையாளர் மணிமாறன் இயமலை, இவ்வாண்டு தெக்குன் நேஷனல் மூலம் ஒரு லட்சம் ரிங்கிட் நிதியுதவி பெற்றதாகக் கூறினார். இந்த நிதி தனது வணிக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற நிதியுதவிகள் தொடர்ந்து கிடைத்தால் தன்னைப் போன்ற சிறு வணிகர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்தி வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றார். 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மேலும் பல இந்தியத் தொழில்முனைவோர் பயனடைய வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காய்கறி வியாபாரி புனிதா ராஜகோபால் (தெக்குன் பயனாளர்)

அமனா இக்தியார் திட்டம் தொடங்கிய காலம் தொட்டே தொடர்ந்து நிதியுதவி பெற்று வரும் கச்சாங் பூத்தே, பலகார விற்பனையாளர் கெர்லின் ஜோகிம், இத்திட்டம் பெண்கள் சுயமாகக் காலூன்றி, தன்னம்பிக்கையுடன் சொந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்லப் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாகக் கூறினார். குறிப்பாக, 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது தன்னைப் போன்ற பெண் தொழில்முனைவோருக்கு மேலும் ஊக்கமளிக்கும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல், சந்தையில் காய்கறி விற்பனை செய்து வரும் புனிதா ராஜகோபால், இரண்டாவது முறையாக தெக்குன் நிதியுதவி பெற்றுள்ளதாகக் கூறினார்.

இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிப்பது எளிதாக இருப்பதுடன், குறுகிய காலத்திலேயே நிதி கிடைத்துவிடுவதாகவும், வட்டி விகிதமும் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிறு வணிகர்களின் தேவையை உணர்ந்து 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை அரசு அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், தமிழ்ப்பள்ளிகளின் பழுதுபார்ப்பு, பராமரிப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக 5 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மோசமான நிலையில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். இதனுடன், ஜொகூர் மாநிலம் குளுவாங்கில் உள்ள லாடாங் பாமோல் தமிழ்ப்பள்ளிக்கு முழுமையான மாற்றுக் கட்டடம் அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்து ஆலயங்கள் உள்ளிட்ட இந்து அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் 8 கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. தகன வசதிகளை மேம்படுத்துவதும் இந்நிதியின் நோக்கங்களில் ஒன்றாகும். இதற்கிடையில், கோலாலம்பூரில் நடைபெற்ற 2026 தீபாவளிச் சந்தையில் வியாபாரிகளுக்கான கடை வாடகை குறைக்கப்பட்டது. முன்பு 2,626 ரிங்கிட்டாக இருந்த கடை வாடகை, வைப்புத்தொகை உட்பட அதிகபட்சம் 400 ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது.

முறக்கு வியாபாரி கெர்லின் ஜோகிம் (அமானா இக்தியார் பயனாளர்)

இதன் மூலம் பண்டிகைக் காலத்தில் சிறு வியாபாரிகள் எதிர்கொள்ளும் செலவுச் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தத்தில், வரவுசெலவுத் திட்டம் 2027-இல் இந்தியச் சமூகத்தின் கல்வி, இளைஞர்களின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் வளர்ச்சி, தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்பு எனப் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தெக்குன் நேஷனல், அமனா இக்தியார் மலேசியா ஆகியவற்றின் மூலம் ஏற்கெனவே பயனடைந்து வரும் சிறு வணிகர்களின் அனுபவங்கள், இத்தகைய நிதியுதவித் திட்டங்கள் தனிநபர்களின் வாழ்வாதாரத்திலும் தொழில் வளர்ச்சியிலும் ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

எனினும், அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதோடு, திட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடனும் முறையாகவும் செயல்படுத்தப்படுவது அவசியம். கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தி, இளைஞர்களுக்குத் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சிறு தொழில்முனைவோரின் பொருளாதார நிலையை உயர்த்துவதன் வழியாகவே இந்த ஒதுக்கீடுகள் நீண்டகாலப் பலனைத் தர முடியும். இந்தியச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதே வரவுசெலவுத் திட்டம் 2027-இன் முக்கிய எதிர்பார்ப்பாக அமைகிறது.

ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here