கோலாலம்பூர்,
செல்போன்களில் திடீரென எச்சரிக்கை ஒலி வரலாம் – பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்!
மலேசியாவில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போது பொதுமக்களுக்கு உடனடியாக எச்சரிக்கை வழங்கும் புதிய Cell Broadcast System (CBS) நாளை (நவம்பர் 19) சோதனை செய்யப்படவுள்ளது.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) மேற்கொள்ளும் இந்தச் சோதனை, சிலாங்கூர், கோலாலம்பூர், கிளந்தான் மற்றும் பகாங் மாநிலங்களில் வெள்ள அபாயம் அதிகமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனையின்போது பொதுமக்களின் செல்போன்களில் திடீரென பேரிடர் எச்சரிக்கை செய்திகள் தோன்றலாம். உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தும் செய்திகளும் வரக்கூடும்.
இவை சோதனைக்காக அனுப்பப்படும் செய்திகள் மட்டுமே. உண்மையான பேரிடர் ஏற்பட்டதாகப் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டியதில்லை.
தற்போது மலேசியாவில் பேரிடர் எச்சரிக்கைகள் பெரும்பாலும் குறுஞ்செய்திகள் (SMS) மூலம் அனுப்பப்படுகின்றன. ஆனால் புதிய CBS முறையில், குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்போன்களுக்கு நேரடியாக எச்சரிக்கை அனுப்ப முடியும்.
இதற்குச் செல்போன் எண், இணைய வசதி அல்லது தனி செயலி தேவையில்லை. செல்போன் தொடர்பு வலையமைப்பு செயல்பட்டுக்கொண்டிருந்தால், இணையச் சேவைகள் நெரிசலாக இருக்கும் நேரத்திலும் இந்த எச்சரிக்கைகளைப் பெற முடியும்.
ஏற்கெனவே ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இதுபோன்ற எச்சரிக்கை முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி போன்ற ஆபத்துகள் குறித்த எச்சரிக்கைகள் சில நொடிகளில் மக்களுக்குச் சென்றடைகின்றன. சிங்கப்பூரில் எச்சரிக்கை செய்திகள் தனித்துவமான ஒலி மற்றும் அதிர்வுடன் செல்போன்களில் தோன்றும். அங்கு ஆங்கிலம், மலாய், தமிழ், சீனம் ஆகிய மொழிகளிலும் எச்சரிக்கைகள் வழங்கும் வசதி உள்ளது.
மலேசியாவிலும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு விரைவாகத் தகவல் வழங்கி உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் குறைப்பதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும்























