நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி! வெள்ளிக்கிழமை மீண்டும் மன்னரைச் சந்திக்கிறார் மந்திரி பெசார்!

பெட்டாலிங் ஜெயா,

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில், மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் லாசிம், வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரை மீண்டும் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கான அட்டவணை மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்ட 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நேற்று இஸ்தானா ஹிங்காப்பில் மாநில ஆட்சியாளரைச் சந்தித்த இஸ்மாயில் லாசிம், இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக அவரைச் சந்திக்கவுள்ளார்.

இதற்கிடையில், இஸ்மாயில் லாசிம் தனது மந்திரி பெசார் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பாரிசான் நேஷனல் திங்கள்கிழமை அறிவித்திருந்தது.

எனினும், அந்த ராஜினாமாவை அரண்மனை ஏற்றுக்கொள்ளவில்லை. தனியார் சட்ட நிறுவனத்தின் மூலம் நள்ளிரவில் அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்ததாகவும், அதன் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது.

மாநில அரசியலமைப்பின்படி, மந்திரி பெசார் தனது ராஜினாமாவை நேரடியாக மாநில ஆட்சியாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆட்சியாளரின் ஒப்புதல் கிடைத்த பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனால், இஸ்மாயில் லாசிம் வழக்கம்போல் மந்திரி பெசாராகத் தனது பணிகளைத் தொடர்வார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பதவி நீக்கம் செய்யப்பட்ட 10 முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களது பதவி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை இன்று மீட்டுக்கொண்டுள்ளனர்.

இவர்களில் எட்டு பேர் பாரிசான் நேஷனலையும், இருவர் பெரிக்காத்தான் நேஷனலையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த ஏப்ரல் மாதம் துவாங்கு முஹ்ரிஸ் பதவியிலிருந்து முறையாக நீக்கப்பட்டதாகவும், துங்கு நட்ஸாருடின் துவாங்கு ஜாஃபார் புதிய ஆட்சியாளர் என்றும் இவர்கள் பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.

இந்த நடவடிக்கை மாநில ஆட்சியாளருக்கு அவர்கள் வழங்கிய அரசியலமைப்பு விசுவாச உறுதிமொழிக்கு முரணானது என அரண்மனை கருதியதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் அவர்களது ஆட்சிக்குழு பதவிகள் பறிக்கப்பட்டன.

தற்போது மாநில நிர்வாகம் சுமுகமாகச் செயல்படுவதற்காக, அந்த 10 பேரையும் மீண்டும் ஆட்சிக்குழுவில் நியமிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து வெள்ளிக்கிழமை சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here