சரவாக் மாநிலத் தேர்தல் சூடுபிடிக்கிறது! இதுவரை 517 வேட்புமனுப் படிவங்கள் விற்பனை!

கூச்சிங்,

சரவாக் மாநிலத்தின் 13ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 28ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதுவரை 517 வேட்புமனுப் படிவங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.

சரவாக் மாநிலத் தேர்தல் இயக்குநர் அபாங் நோராஃபியான் அபாங் இப்ராஹிம் கூறுகையில், நவம்பர் 6ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுப் படிவ விற்பனையில், நேற்று வரை மொத்தம் 517 படிவங்கள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

இவற்றில் 390 படிவங்கள் சரவாக் மாநிலத் தேர்தல் அலுவலகத்தில் நேரடியாகவும், மீதமுள்ள 127 படிவங்கள் மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறுவதற்காகத் தங்களது வைப்புத் தொகையை முன்கூட்டியே செலுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுப் படிவங்களைத் தேர்தல் அதிகாரிகளிடம் முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவாக் மாநிலத்தில் மொத்தம் 82 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி, சரவாக் முதலமைச்சர் டான் ஸ்ரீ அபாங் ஜொஹாரி ஓபெங், மாநிலச் சட்டமன்றம் அக்டோபர் 26ஆம் தேதி முதல் கலைக்கப்படுவதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் நவம்பர் 28ஆம் தேதியை வேட்புமனுத் தாக்கல் நாளாகவும், டிசம்பர் 8ஆம் தேதியை முன்கூட்டிய வாக்குப்பதிவு நாளாகவும், டிசம்பர் 12ஆம் தேதியை வாக்குப்பதிவு நாளாகவும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here